பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வரும்போது பீகார் மக்கள் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
“லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவியின் காட்டாட்சியை சிவான் மக்கள் 20 ஆண்டுகளாக தாங்கிக் கொண்டிருந்தனர். தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முகமது சபாபுதீன், தனது மகனை ரகுநாத்பூர் தொகுதியில் களமிறக்கியுள்ளார். அவருக்கு அவமானகரமான தோல்வியை மக்கள் வழங்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வரும் நாளான நவம்பர் 14-ந்தேதி பீகார் மக்கள் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள். ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மோசமான தோல்வியை சந்திப்பார்கள். ராகுல் காந்தியின் கூற்றுப்படி, ஊடுருவல்காரர்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் ஊடுருவி வந்த ஒருவர் கூட பீகாரில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதியாக கூறுகிறேன். ”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.