“நிர்மலா சீதாராமனை முதல்வராக அறிவிப்பார் அமித் ஷா” – ஆருடம் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல்

தமிழக சட்டப்பேரவை யின் முக்கியமான மூன்று காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக பதவி வகித்த அனுபவம் கொண்ட அவர், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது.

சட்டப்பேரவையில் நீண்ட அனுபவம் கொண்டவர் நீங்கள். தற்போதைய பேரவை நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்..?

பேரவையில் வாதங்களின் தரம் குறைந்து கொண்டே போகிறது. வாதங்களின் மூலமாக, ஆளுங்கட்சியின் தோல்விகளை, தவறுகளை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக, தினசரி விஷுவல் மீடியாவில் ஏதாவது ஒரு காட்சி வரவேண்டும் என்பதற்கான ஏற்பாட்டுடன் சட்டப்பேரவைக்கு வருகிறார்கள். போதிய தயாரிப்புகளுடன் யாரும் வருவதில்லை. அதோடு, அதிகாரிகளே சபைக்கு பெரிதாக மரியாதை கொடுப்பதில்லை. நாங்கள் சபையில் இருந்தபோது, முக்கிய விவாதங்களின்போது அதிகாரிகள் இல்லை என்றால் ‘பாயின்ட் ஆஃப் ஆர்டர்’ எழுப்புவோம். அதெல்லாம் இல்லாத தற்போதைய நிகழ்வுகள் மனதுக்கு வேதனை அளிக்கிறது.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதல்வராக இருந்தபோது சபை நிகழ்ச்சிகளை எப்படிக் கையாள்வார்கள்?

கருணாநிதியின் காலம் சட்டப்பேரவையின் பொற்காலம். காலை 9 மணிக்கு சபாநாயகர் அறைக்குகருணாநிதி வந்துவிடுவார். அன்று யார், யார் பேசப் போகிறார்கள் என்பதைக் கேட்டுப் பெற்று, திமுக உறுப்பினருக்கான நேரத்தை குறைத்து, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கான நேரத்தை அதிகப்படுத்திக் கொடுப்பார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை விமர்சனத்தை தாங்க முடியாதவராக இருந்தார். ஆலோசனைகளைக் கூட ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறீர்களா?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை. முதல் நாள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மறுநாள், “எல்லா வழக்குகளையும் சிபிஐக்கு அனுப்பக் கூடாது” என முரண்பட்ட தீர்ப்பை அளித்துள்ளது. ஒரு மாநில அரசின் விசாரணை ஏஜென்சியை உச்ச நீதிமன்றம் முழுமையாக எப்படி நிராகரிக்க முடியும்? விசாரணைக் குழுவில் தமிழ் பேசுகிற அதிகாரிகளே இருக்கக் கூடாது என்று சொல்வது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கே விடப்படும் சவால்.

விஜய்க்கு மீடியாக்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கிறீர்களா?

ஒரு பிரியாணி கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி என்று விளம்பரம் செய்தால், வசதியுள்ளவர்கள் கூட, ஒரு ரூபாய்க்கு பிரியாணி கிடைக்கிறதே என்று அங்கு செல்வார்கள். அதுபோல இது ஒருவகையான உத்தியாக மாறிவிட்டது. விஜய் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பு இருந்து, ஒவ்வொரு அசைவையும் நாள் முழுவதும் தொலைக்காட்சிகள் பதிவு செய்து வெளியிட்டன. டி.வி.க்களின் ஸ்லாட்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டதாக கூட தகவல் வருகிறது.

மீடியா பிரஷர் கொடுக்கப்பட்டு மக்கள் வெளியில் வர வைக்கப்படுகின்றனர். டி.வி.க்களில் மாலையில் நடக்கும் விவாதங்களும் இவற்றை சுற்றியே கட்டமைக்கப்படுகின்றன. மக்கள் எதைப் பேச வேண்டும், எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை மீடியாக்களே தீர்மானிகின்றன. 40 டி.வி. சேனல்களை அதானியும், 35 சேனல்களை அம்பானியும் வைத்திருக்கின்றனர். இவர்கள் தான் தலைப்புச் செய்தியைத் தீர்மானிக்கின்றனர்.

விஜய்க்கு மக்களிடம் வரவேற்பு இருப்பதை ஏற்கிறீர்களா..?

இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக எப்படி உடனடியாக மாற்ற முடியாதோ, அதுபோல இது அரசியல் சக்தியாக மாறுமா, அதற்கு அவர்கள் தகுதியானவர்களா, அத்தகைய கட்டமைப்பு அவர்களிடம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.

கரூர் சம்பவத்துக்கு பிறகு, விஜய்யிடம் ராகுல் காந்தி பேசியதும், அதைத் தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான ஹேஷ்யங்களும் கிளம்பியதே..?

ஒரு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில், நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக, முதல்வர் ஸ்டாலினிடம் ராகுல்காந்தி பேசி விவரம் தெரிந்து கொண்டார். அதேபோல், எதிர்முனையில் பேசி ஆறுதல் சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் இதை அரசியல்படுத்த வேண்டியது இல்லை.

பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக நின்றால் அவருடன் காங். கூட்டணி அமைப்பதில் என்ன சிக்கல்?

என்னைப் பொறுத்தவரை அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் போய்விடுவார். கரூர் சம்பவத்திற்கு பிறகு, தனியாக களத்திற்கு வர தவெக தொண்டர்கள் தயங்குகின்றனர். ஒரு கூட்டணி இருந்தால் நல்லது என்று அவர்கள் நினைக்கின்றனர். அதோடு, தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தவரை அமித் ஷா என்ன பிளான் வைத்திருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

பிஹார் தேர்தலில், தொகுதி பங்கீடு முடியும் வரை, நிதிஷ்குமார் தான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்ன அமித் ஷா, பங்கீடு முடிந்ததும், “தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்று சொல்லி விட்டார். இதைப் பார்க்கையில், தமிழகத்திலும் தேர்தலுக்குப் பிறகு, நிர்மலா சீதாராமனை முதல்வர் வேட்பாளராகவும், இபிஎஸ் மற்றும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி என்றும் அமித் ஷா முடிவெடுப்பார் என்று தகவல் வருகிறது.

கூட்டணி ஆட்சி கோஷம் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்கிறது. கடந்த 2006-ல், திமுக பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் அமைச்சரவையில் சேர யார் தடையாக இருந்தார்கள்?

காங்கிரஸ் செய்த பெரிய வரலாற்று பிழை அது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நாங்கள் ஆதரவு கடிதம் தரும் முன்பே, நிபந்தனையற்ற ஆதரவு என பாமக அறிவித்து விட்டது. இதனால் ஆரம்பத்தில் நிபந்தனை விதிக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு கூட்டத்தில் சற்று காட்டமாக பேசினார். இதில் கருணாநிதி வருத்தமடைந்தார்.

மறுநாள், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவரான சுதர்சனத்தையும், கொறடாவான என்னையும் கருணாநிதி அழைத்தார். “நான் உங்களை மந்திரியாக அறிவித்து விட முடியுமா… யார், யாருக்கு மந்திரி பதவி தர வேண்டும் என லிஸ்ட் வாங்கி வாருங்கள்” என்று சொன்னார். “காங்கிரஸ் அமைச்சர்களுக்கு 7 ரூம் தயாராக உள்ளது” என உடன் இருந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொன்னார். இதை நாங்கள் தலைமைக்கு தெரிவித்தோம். ஆனால், பலனில்லை.

அப்படியானால், தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பது இனி கனவுதானா?

காமராஜர் ஆட்சிக்கு பிறகு கிடைத்த ஐந்து வாய்ப்புகளை காங்கிரஸ் பறிகொடுத்து விட்டது. 1989-ல் மூப்பனார் தொடங்கிய முயற்சியைத் தொடர்ந்து இருந்தால், வலுவான இயக்கமாக மாறியிருப்போம். ஆனால், அடுத்த தேர்தலில் டெல்லி தலைமை சொன்னதால், அதிமுகவுடன் கூட்டு சேர வேண்டி வந்தது. மூப்பனாருக்குப் பிறகு அந்த முயற்சியை செய்யக்கூடிய தைரியம் யாருக்கும் வரவில்லை.

அதேசமயம் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும், காங்கிரஸ்காரர்கள் இல்லாத ஊர் தமிழகத்தில் இல்லை. தற்போது கூட 21 ஆயிரம் கமிட்டிகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 17 ஆயிரம் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு தற்போது மறுமலர்ச்சி தேவை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.