தஞ்சாவூர்: நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய அரசை காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தான் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்து செல்லாததால், அங்கு புதிய நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை என்று தவறான குற்றச்சாட்டை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில், அக். 1-ம் தேதி தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டில் இருந்து செப்.1-ம் தேதியே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
அதன்படி, நிகழாண்டு செப்.1-ம் தேதி முதல் இதுவரை 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் டன் நெல் மூட்டைகள் குடோனுக்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதம் உள்ள நெல் மூட்டைகளை கொண்டு செல்லும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவான அளவில் நெல் கொள்முதல் செய்வதாகவும் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளார். ஒரத்தநாடு பகுதிகளில் தினமும் 3,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் யாரும், எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. பழனிசாமி மட்டும் தான் பொய் புகார்களை கூறி வருகிறார். அதேபோல நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து விட்டது என்ற ஒரு நாடகத்தை பழனிசாமி நடத்தியுள்ளார்.
அதில், அவரிடம் புகார் தெரிவித்த பெண்ணின் ஊருக்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குத்தகை விவசாயம் செய்யும் அந்தப் பெண்ணின் வயலில் இதுவரை எந்த அறுவடையும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது. அறுவடையே நடைபெறாத வயலிலிருந்து, அவர் எப்படி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
அதேபோல, செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் இறுதியில், ஒரு வழிகாட்டுதல் குழுவை தான் தமிழகத்துக்கு வழங்கியது. அதற்கு இதுவரை மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதையெல்லாம் மறைத்து பாஜக அரசை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பழனிசாமி இந்த பொய்களை தெரிவித்து வருகிறார். அதை மக்களோ, விவசாயிகளோ நம்ப எந்த நேரத்திலும் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கோவி.செழியன், டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.