சமஸ்திபூர்: நிதிஷ் குமார் தலைமையின் கீழ் முந்தைய தேர்தல் சாதனைகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை முறியடிக்கும் என்று பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிஹாரின் சமஸ்திபூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பெருமளவில் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த 11 ஆண்டுகளில் பிஹாருக்கு மத்திய அரசு வழங்கிய நிதி, முந்தைய (மன்மோகன் சிங்) அரசு வழங்கியதைவிட மூன்று மடங்கு அதிகம். மாநிலம் தற்போது தலைகீழாக மாறிவிட்டது.
பிஹார் இப்போது மீன்களை ஏற்றமதி செய்கிறது. பிஹாரின் பிரபலமான விளைபொருளான மக்கானா, தற்போது நாட்டின் தொலைதூரங்களில் உள்ள சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பிஹார், தனது சொந்த தேவைகளுக்காக மற்ற மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டிய காலம் எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது.
பாரத ரத்னா விருது பெற்ற கற்பூரி தாக்கூர், பிஹாரின் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டார். அவர் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். அரசியலமைப்பின் நகலை கையில் வைத்துக் கொண்டிருப்பவர் (ராகுல் காந்தியை குறிப்பிடுகிறார்) மக்களை தவறாக வழிநடத்துகிறார். ஓபிசிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றி உள்ளது. புதிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 2005ல் மாநில முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அவரது பதவிக்காலத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் (2004 முதல் 2014 வரை) மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் வளர்ச்சி தடைபட்டது. நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என அப்போதைய மத்திய அரசை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தொடர்ந்து மிரட்டியது.
பிஹாரில் காட்டாட்சி நடந்ததை யாரும் மறக்க மாட்டார்கள். ஆர்ஜேடி ஆட்சியின்போது பிஹாரின் ஒரு டஜன் மாவட்டங்கள் மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சினர். 2014ல் மத்தியில் எனது தலமையிலான அரசு அமைந்தபோது மாவோயிஸத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் உறுதி அளித்தேன். மிகுந்த பணிவுடனும் திருப்தியுடனும் நான் ஒன்றைக் கூறுகிறேன், மாவோயிஸத்தின் முதுகெலும்பை நாம் தற்போது உடைத்துவிட்டோம். விரைவில் மாவோயிஸ அச்சுறுத்தலில் இருந்து விடுபடும். இது மோடியின் உத்தரவாதம்.
எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்கள். கற்பூரி தாக்கூரின் ஜனநாயகத்தின் தலைவர் எனும் பட்டத்தை அவர்கள் திருடப் பார்க்கிறார்கள். மீண்டும் காட்டாட்சி ஏற்படாமல் பிஹார் மக்கள் தடுப்பார்கள். அவர்கள் நல்லாட்சிக்கு வாக்களிப்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி அமைந்ததும் பிஹாரின் வளர்ச்சி வேகமெடுக்கும்.
நிதிஷ் குமார் தலைமையின் கீழ் முந்தைய தேர்தல் சாதனைகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை முறியடிக்கும். குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் எப்படி முந்தைய தேர்தல் சாதனைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி முறியடித்ததோ அதுபோல இம்முறை பிஹாரிலும் முறியடிக்கும்” என தெரிவித்தார்.