ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் மகளும் தெலங்கானா மேலவை (எம்எல்சி) உறுப்பினருமான கவிதா,
கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், யாதகிரி குட்டா பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா ஜாக்ருதி எனும் அமைப்பு சமூக அக்கறை கொண்ட ஓர் அமைப்பாக விளங்கி வருகிறது. இதன் தலைவராக நான் இருக்கிறேன். தேவைப்பட்டால் இந்த அமைப்பு கட்சியாக கூட மாறும் வாய்ப்பு உள்ளது. மக்களுக்கு தேவையென்றால் புதிய கட்சியை தொடங்க தயங்க மாட்டேன். வரும் 25-ம் தேதி முதல் மக்களுக்கான பாதை (ஜனம் பாட்டா) எனும் நிகழ்ச்சியை தொடங்குவேன்.
4 மாதங்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். மக்களின் பிரச்சினைகளை அறிய உள்ளேன். இது வெற்றியடைய வேண்டி லட்சுமி நரசிம்மரை தரிசித்தேன். இவ்வாறு கவிதா பேசினார்.