மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக-வின் 54 ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக-வில் மூன்றாம் தலைமுறையினர் தலை எடுத்துள்ளனர். மற்ற கட்சியில் வயதானவர்கள்தான் இருக்கிறார்கள். 54 ஆண்டுகள் ஆகியும், இந்த கட்சிக்கு இளைஞர்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். 31 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில், சாமானியருக்கும், பட்டியல் இனத்தவர்க்கும், மகளிருக்கும் சம உரிமையுடன் பதவி கொடுத்து அழகு பார்த்தது.

ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது சகஜம், ஆனால் திமுக-விலிருந்து பிரிந்த அதிமுக, இந்தியாவில் 3 வது பெரிய கட்சியாக இருக்கிறது. எம்ஜிஆர் 3 தடவை தொடர்ந்து வெற்றிப் பெற்று, தமிழகத்தை ஆண்டார். நடிகர் கட்சி என்று விமர்சித்தவர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்கினார்.
எந்த தலைவனுக்கு அரசியல் தெரியாது என்று சொன்னார்களோ, அந்த எம்ஜிஆர்தான் சத்துணவு திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை, தாலிக்கு தங்கம், மழை நீர் சேகரிப்பு என வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா கொண்டு வந்த விலையில்லா அரிசி திட்டத்தால் இன்று கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை 34 ஆயிரம் கடைகளில் விலையில்லா அரிசி கிடைக்கிறது.
எம்ஜிஆர் கொண்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்தியவர் ஜெயலலிதா. ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து அரசியலில் படிப்படியாக உயர்ந்து நான்ரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியைத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி. குடிமராமத்து திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்து, கூட்டுறவு சங்கத் தேர்தலை 2 முறை நடத்திக் காட்டியவர்.
புயல், சுனாமி போன்ற காலங்களில் சிறப்பான நிவாரணப் பணிகள் செய்ததுடன் தடையில்லா மின்சாரம், விவசாயக் கடன்கள் தள்ளுபடி என சிறப்பாக செயல்பட்டது. மடிக்கணினி, இலவச சைக்கிள் திட்டங்களை தொடராமல் போனதுதான் திமுக-வின் சாதனை. கொரானோ காலத்தில் கூட உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது அதிமுக அரசு. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டாயிரம் ஆண்டு பழமையான மதுரையை நவீனமாக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர்கள் ஜெயலலிதாவும், எடப்பாடியாரும்

எங்கள் பத்தாண்டு கால ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார். இந்த திமுக ஆட்சியில் போதை கலாசாரம் அதிகமாகி, 3 வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கபடுகிறார்கள். மடிக்கணினி திட்டம், இடைநிற்றலைத் தடுக்க உதவித் தொகை என கல்வியில் சிறப்பான மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்தது அதிமுக. 40 ஆண்டு காலம் நிரம்பாத மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி சாதனை படைத்தது. திமுக ஆட்சியில் பராமரிக்காததால் இன்று தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை.
வைகை கரையில் சாலைகள் அமைத்து அதிமுக ஆட்சியில் சாதனைப் படைத்தோம். திமுக ஆட்சியில் கலைஞர் நூலகம், ஏறு தழுவுதல் அரங்கம் இதை தான் சாதனையாக மதுரைக்குச் சொல்கிறார்கள்.
170 கோடியில் கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்தின் திட்டத்தை வடிவமைத்ததை அதிமுக அரசு. அதனை விரைவுப்படுத்த முடியாமல், திமுக ஆட்சியில் பாலப்பணி இன்னும் நிறைவடைய வில்லை. மதுரை 100 வார்டுகளுக்கும் குடிநீர் கொண்டு வர வேண்டிய, முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டத்தை இன்னும் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு.
நமது ஆட்சிக் காலத்தில் மதுரையை இந்தியாவில் முதல் தூய்மையான மாநகராட்சியாக ஆக்கினோம். இன்று குப்பை மாநகராட்சியாக கடைசி இடத்தில் இருக்கிறது. அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டாக போராடி 200 கோடி மாநகராட்சி வரி வசூல் ஊழலை வெளிக் கொண்டு வந்தோம். ஊழல் வழக்கில் மேயர் ராஜினாமா வரை சென்றுள்ள அவலம் நடந்துள்ளது.
விஞ்ஞான ஊழலில் திளைத்த திமுக-விற்கு எதிராக உருவான கட்சி தான் திமுக. மேயர் ராஜினமா செய்து இரண்டு வாரமாகியும், மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர் ராஜினமா செய்து இரண்டு மாதங்களாகியும் புது மேயரை நியமிக்க இயலாமல் திணறுகிறது திமுக. 69 திமுக கவுன்சிலர்கள், இரண்டு அமைச்சர்கள் இருந்தும், திமுகவால் ஒரு மேயரைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை. பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள்” என்றார்.