இந்தூர்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஆஸ்திரேலிய அணியினர் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலுக்கு 2 வீராங்கனைகள் நடந்து சென்றனர். அப்போது அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு (தகாத முறையில் தொட்டதாக கூறப்படுகிறது) வேகமாக சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீராங்கனைகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் இந்த சம்பவம் நடந்தபோது அருகில் இருந்த ஒருவர் அந்த 2 பேர் தப்பிச்சென்ற வாகன எண்ணை கூறினார். இதனையடுத்து விசாரணையை துரிதமாக மேற்கொண்ட போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட இந்தியா வந்துள்ள வீராங்கனைகளுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. விருந்தினர்களிடம் அக்கறை, அரவணைப்பை காட்டுவதில் இந்தியா பெயர் பெற்றது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை விரைவாக கைது செய்த மத்திய பிரதேச போலீசாரை பாராட்டுகிறோம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.