கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிபிஐ குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் முதல்தகவல் அறிக்கையை கடந்த 22-ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் என குறிப்பிட்டு, விசாரணையைத் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் சிபிஐ தாக்கல் செய்துள்ள எஃப்ஐஆரின் நகலைக் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆரின் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.