பிஹாரில் இண்டியா கூட்டணியின் ‘விஐபி’ முகம் – யார் இந்த முகேஷ் சஹானி?

பிஹார் தேர்தலில், மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக விகாஷில் இன்சன் கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முகேஷ் சஹானி கட்சி பெயர் மட்டும் விஜபி அல்ல, சஹானியுமே ஒரு விஐபி தான்.

243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகா கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ (எம்எல்), விஐபி கட்சி, சிபிஐ, சிபிஎம், ஜேஎம்எம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், முகேஷ் சஹானியை மகா கூட்டணி துணை முதல்வர் வேட்பாளராக களமிறக்கியது ஸ்மார்ட் அரசியல் என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. 40 தொகுதிகளாவது வேண்டும் என்று பிடிவாதம் காட்டிய சஹானி துணை முதல்வர் வேட்பாளர் அந்தஸ்தால் உச்சி குளிர்ந்துள்ளார். இந்த நகர்வு பற்றியும் சஹானியின் விஐபி அந்தஸ்து பற்றியும் பார்ப்போம்.

ஆரம்பத்திலிருந்தே மகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நீண்ட இழுபறி நிலவியது. அதற்கு விஐபி கட்சியும் ஒரு காரணம். கிட்டத்தட்ட கூட்டணியை விட்டு வெளியேறும் நிலைக்கு விஐபி கட்சி வந்தபோதுதான், அக்கட்சிக்கு 15 தொகுதிகளை வழங்க முன்வந்தது மகா கூட்டணி. கூடவே, துணை முதல்வர் வேட்பாளர் பதவியிலும் முகேஷ் சஹானியை நிறுத்தி சரிகட்டியுள்ளது. பிஹார் எதிர்க்கட்சிக் கூட்டணியின் விஐபி அடையாளமாகியுள்ளார் சஹானி.

பாலிவுட் டூ பிஹார் அரசியல்: 1981-ல் ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்தவர் முகேஷ் சஹானி. இவருக்கு ‘சன் ஆஃப் மல்லா’ ( Son of Mallah ) என்ற அடைமொழி உள்ளது. அவர் சார்ந்த சமூகத்தில் ஏற்பட்ட ஒரு கலவரம் அவரை 19 வயதிலேயே பிஹாரில் இருந்து வெளியேற நிர்பந்தித்தது. அங்கிருந்து கிளம்பிய அவரது கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது. பாலிவுட்டில் செட் டிசைனர் ஆனார். ஷாருக்கான் நடித்த ‘தேவதாஸ்’, சல்மான் கான் நடித்த ‘தபாங்’ படங்களில் இவர் தான் செட் டிசைனர். முகேஷ் சினி வேர்ல்டு பிரைவேட் லிமிடெட் என்பது இவரது செட் டிசைன் நிறுவனத்தின் பெயர். இந்த நிறுவனம் பாலிவுட்டில் மிகவும் பிரபலம்.

2013-ல், பிஆர் அம்பேத்கரின் கொள்கைகளாலும், பிஹார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூரின் அரசியல் ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டார். அதனால் பிஹாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடிவெடுத்தார். பிஹாரில் 3-ல் ஒரு பங்கு மக்கள் தொகை இந்த இந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டதே.

2018-ல் விகாஷில் இன்சான் கட்சியை நிறுவினார். நிஷாத் – மல்லா சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சியாக தனது கட்சியை அடையாளப்படுத்தினார். பிஹார் வாக்குவங்கியில் இந்த சமூகத்தின் பங்களிப்பு 12%.

2020 சட்டப்பேரவைத் தேர்தலில் விஐபி கட்சி வென்றெடுத்தது என்னவோ வெறும் 4 சீட் தான். ஆனால், சஹானியின் தனிப்பட்ட செல்வாக்கு, சாதி அபிமானம் அவரை முக்கியம் வாய்ந்தவராக்கியது. வடக்கு பிஹார் எப்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய பகுதி. அங்கு அவர் இப்போது பாஜக எதிராக வலுவாக முழங்கும் முகம். ஆனால், 2020 தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் தான் இருந்தார் என்பது இங்கே பதிவு செய்யப்பட்ட வேண்டியது.

மகா கூட்டணியின் ரகசிய ஆயுதம் – சாதி அரசியல் உக்கிரமாக இருக்கும் பிஹாரில் மகாகட்பந்தன் கூட்டணி இபிசி (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) வாக்குகளைப் பெற விஐபி கட்சி அவர்களுக்குக் கிடைத்த ரகசிய ஆயுதம். என்டிஏ கூட்டணியின் நலத்திட்ட அறிவிப்புகளால் கடந்த முறை நிதிஷ் பக்கம் சாய்ந்த நிஷாத் – மல்லா சமூகத்தினரை இம்முறை மகா கூட்டணி வாக்காளர்களாக மாற்ற விகாஷ் ஒரு முக்கிய முகம்.

தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளர், முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளர் என்பது ஆர்ஜேடியின் வழக்கமான யாதவர்கள், முஸ்லிம்கள் வாக்குவங்கியையும் தாண்டி இபிசி சமூகத்துக்கு கடத்தப்படும் ஒரு வெளிப்படையான செய்தி. இது என்டிஏவுக்கு சவாலும் கூட.

விஐபி கட்சி மகா கூட்டணிக்கு வந்துள்ளதால் இபிசி வகுப்பினரின் 5 முதல் 7 % வாக்குகளை முகேஷ் மடைமாற்றித் தருவார் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். மகாகட்பந்தன் கூட்டணி 243 தொகுதிகளில் 253 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அதாவது 11 தொகுதிகளில் கூட்டணிக்குள்ளேயே எதிரெதிர் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இத்தகையச் சூழலில் விஐபி கட்சி பெற்றுத்தரப் போகும் வாக்கு முக்கியமானது.

வேலைவாய்ப்பின்மை, வெள்ள பாதிப்பு போன்றவற்றால் ஆளும் ஜேடியு – பாஜக மீது அதிருப்தியுள்ளவர்களின் வாக்குகளை மகா கூட்டணிக்கு சாதகமாக்குவதில் விஐபி கட்சியின் பாஜக எதிர்ப்புத் தீ நன்றாகவே வேலை செய்யும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். 2020-ல் மகா கூட்டணியை விட்டு விஐபி கட்சி வெளியேறி என்டிஏ-வில் இணையக் காரணம் தொகுதிப் பங்கீடு சர்ச்சை என்பதால் இம்முறை இதை திறமையாகக் கையாண்டுள்ளது மகா கூட்டணி.

இப்போது துணை முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதால் சஹானி களத்தில் சுழன்று வந்து பாஜக எதிர்ப்பை வலுப்படுத்தி வருகிறார்.

தேஜஸ்வி யாதவின் சாதுர்யமான நகர்வால், அவர் வேலைவாய்ப்பின்மையால் சோர்ந்து போயுள்ள இளம் வாக்காளர்களை தனது கூட்டணியின் பக்கம் திருப்பியுள்ளார். அதேபோல் இபிசி வாக்குகளிலும் கணிசமான ஒரு பகுதியை பெறுவதை உறுதி செய்திருக்கிறார்.

உண்மையில் பிஹாரில் இபிசி வாக்காளர்களின் காந்தம் நிதிஷ் குமார் என்றாலும் கூட, மகா கூட்டணி விஐபி கட்சியின் முகேஷ் சஹானியை வைத்து இபிசி வாக்குகளை நிச்சயமாக அதன் பக்கம் ஈர்க்க முடியும். பிஹார் தேர்தலில் முகேஷ் சஹானி வெறும் பகடைக் காய் அல்ல. அவரை கிங் மேக்கர் என்றாலும் அது மிகையாகது.

ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியான மகாகட்பந்தனில் அவ்வப்போது எழும் சலசலப்புகள் எந்த விரிசலையும் ஏற்படுத்தா வண்ணம் வலுவான பூச்சாக விஐபி கட்சியின் முகேஷ் சஹானி இருப்பார். குறைந்தபட்சம் நவம்பர் 14 தேர்தல் முடிவு நாள் வரை இதை அவர் கட்டிக்காப்பார் என்று கணிக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.