சிவகாசி: தனியார் பல்கலை சட்ட திருத்த முன்வடிவு மறு ஆய்வு செய்யபடும் என உயர்கல்வி துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், அடுத்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் சட்ட திருத்த முன் வடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் பல்கலைக்கழக சட்டம் 2019-ல் திருத்தம் செய்து உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்த முன் வடிவு நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஊதிய பாதுகாப்புக்கும், பணிப்பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும், கல்விக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்பதால் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கும் இச்சட்ட திருத்தத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்ப்பு காரணமாக சட்டத்திருத்த முன் வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்ற உயர்கல்வி துறை அமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதே நேரம் அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இச்சட்டத் திருத்த முன் வடிவை முழுவதும் திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.