சென்னை,
தமிழக அரசின் ஆதரவுடன் 2-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடக்க இருந்தது.
3 ஆண்டுக்கு பிறகு நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 69-வது இடம் வகிக்கும் ஜய்னப் சோன்மெஸ் (துருக்கி), 74-ம் நிலை வீராங்கனை பிரான்செஸ்கா ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா), நடப்பு சாம்பியனான லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), லுசியா பிரான்செட்டி (இத்தாலி), ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையுடன் 250 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி ரூ.11.5 லட்சம் பரிசாக பெறுவார்கள்.
இந்நிலையில், சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரின் முதல் நாள் ஆட்டங்கள் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடரின் முதல் நாள் ஆட்டங்கள் நாளை பகல் 12 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.