சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நாளை (அக்.29) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பிஹாரில் முதல் கட்டமாக சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் நடந்து வந்தன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த தேர்தல் வழக்கு ஒன்றில் ஆஜாராகிபதில் அளித்த தேர்தல் ஆணை யம் விரைவில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடை பெறவுள்ளதாக தெரிவித்தது. இதன்படி நவ.4-ம் தேதி அப்பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 70 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் வரும் நவ.4-ம் தேதி சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்க உள்ளது. இதையொட்டி, 70 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்க ளுக்கான பயிற்சிகள் இன்று தொடங்க உள்ளன. நவ.3-ம்தேதிக்குள் இந்த பயிற்சிகளை முடிக்க தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் நாளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அர்ச்சனா பட் நாயக் ஆலோசனை நடத்துகிறார். வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிச.9-ம் தேதி வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அதிமுக வரவேற்றுள்ளது.