விழுப்புரம்: கூட்டேரிப்பட்டு அடுத்த ஆலகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வைஷ்ணவி தேவி- ஆலகிராமம், செக்கடி தெரு சந்திப்பில் பாதியளவு மண்ணில் புதைந்தும் புதர்கள் அடர்ந்துள்ள பகுதியில் வைஷ்ணவி தேவி சிற்பம் காணப்பட்டது. நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். தேவியின் முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையிலும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கிறாள். அழகிய தலை அலங்காரம், அணிகலன்களுடன் அழகே உருவாகக் காட்சி தருகிறாள் வைஷ்ணவி தேவி.
கௌமாரி – செல்லியம்மன் கோயில் வளாகத்தில் கௌமாரி சிற்பம் காணப்படுகிறது. வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அழகிய ஆடை அணிகலன்கள் மற்றும் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலி அணிந்து புன்முறுவல் பூத்த நிலையில் மிகுந்த கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.
வைஷ்ணவி, கௌமாரி சிற்பங்கள் சோழர் காலத்தைச் (கி.பி.10-ம் நூற்றாண்டு) சேர்ந்தவை. இதனை மூத்த தொல்லியலாளர் கி.ஸ்ரீதரன் உறுதிப்படுத்தி உள்ளார். ஒரு காலத்தில், இவை சிவன் கோயில் வளாகத்தில் இருந்திருக்க வேண்டும். எப்படியோ வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
பௌத்த சிற்பம்: ஜெயினர் கோயில் தெரு ஓரத்தில் புதர்கள் மண்டிய இடத்தில் பௌத்த சிற்பம் காணப்படுகிறது. அமர்ந்த நிலையில் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். பிண்ணனியில் ஐந்து தலை நாகம் காட்டப்பட்டுள்ளது. இவர் பௌத்த சமயத்தைச் சார்ந்த அவலோகிதேஸ்வரர் ஆவார். இந்த சிற்பத்தின் காலமும் கி.பி.10ம் நூற்றாண்டாகும். இதேபோன்ற சிற்பம் பிரான்மலை அருகாமையில் உள்ள திருக்கோளக்குடி பகுதியில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கோ.விஜயவேணுகோபால், விழுப்புரம் மாவட்டத்தில் பௌத்தம் பரவியிருந்ததற்கு இச்சிற்பம் சான்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆலகிராமத்தில் உள்ள மேற்காணும் 3 சிற்பங்களும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மேலும் இப்பகுதியில் கல் வெட்டுடன் கூடிய பலகைக் கல் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதால் இதிலுள்ள தகவலை அறிய இயலவில்லை. ஆலகிராமத்தில் ஏற்கனவே பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி, ஐயனார், முருகன், லகுலீசர், விஷ்ணு சிற்பங்கள் அமைந்துள்ளன. தற்போது சோழர் கால சிற்பங்களும் கண்டறியப் பட்டிருப்பது இந்த கிராமத்தின் வரலாற்று சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிற்பங்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்” என்று செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.