பெங்களூரு: கர்நாடகாவில் வரும் நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல்வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் துணை முதல்வர் பதவி வழங்கியது.
முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று வரும் நவம்பருடன் இரண்டரை ஆண்டு நிறைவடைகிறது. எனவே டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் 2028-ம் ஆண்டு வரை தானே முதல்வராக தொடரப் போவதாக சித்தராமையா கூறியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் மூத்த எல்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச்சரவையில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை வலுத்துள்ளதால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சரவையை மாற்றி அமைக்குமாறு காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் 4 மாதங்களுக்கு முன்பே என்னிடம் கூறினர். ஆனால் நான் ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு நிறைவடைந்த பிறகு அமைச்சரவையை மாற்றலாம் என கூறினேன். வரும் நவம்பரில் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே அப்போது அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்.
இதுதொடர்பாக நவம்பர் 16-ம் தேதி டெல்லி செல்கிறேன். அப்போது காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அவர்களது ஆலோசனையின்படி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.