பெங்களூரு: கர்நாடக முதல்வர் மாற்றம் மற்றும் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது என்று கூறினார்.
கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “காங்கிரஸ் உயர் தலைமையின் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். உயர் தலைமை முடிவு செய்தால், எனது பதவிக் காலத்தை முழுவதுமாக முடிப்பேன்.” என்றார்.
சித்தராமையாவின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவக்குமார், “முதல்வரின் கருத்துக்குப் பிறகு நான் என்ன அதுபற்றி சொல்ல முடியும். நாங்கள் அவரது வார்த்தையைப் பின்பற்றுகிறோம். அவரது வார்த்தையே இறுதியானது.” என்றார்.
அவரது டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர் அம்பிகா சோனியின் வீட்டுக்குச் செல்வதற்காக நான் டெல்லி வந்தேன். அவரது கணவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றேன். நான் திஹார் சிறையில் இருந்தபோது சோனியா காந்தியுடன் அவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர், என்னை ஒரு தம்பியைப் போல நடத்துகிறார்.
நான் ஏன் டெல்லி சென்றேன் என்பதற்கான காரணம் பற்றி மட்டுமே என்னால் பேச முடியும். உயர் தலைமையுடனான எனது சந்திப்பு குறித்து பொதுமக்களும், ஊடகங்களும் எதையும் விவாதிக்கலாம்; அதுபற்றி எனக்கு கவலை இல்லை.” என்றார்.
முன்னதாக, முதல்வர் மாற்றம் மற்றும் கர்நாடக அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, “கட்சியின் உயர்தலைமை சொல்வதுதான் இறுதி முடிவு. சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து வரும் கருத்துகள் பொருத்தமற்றவை. இந்த நேரத்தில், கட்சியின் உயர் தலைமையிலிருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. பிஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் டெல்லிக்குச் செல்வார்கள். அப்போது ஏதாவது தகவல் வரக்கூடும் என்று நான் நினைக்கிறேன். கட்சி உயர் தலைமை மட்டுமே அமைச்சரவை மாற்றம் அல்லது தலைமையை மாற்றுவது குறித்து முடிவெடுக்கும்.” என்று அவர் கூறினார்.