துபாய்: யுஏஇ லாட்டரியில் இந்திய ருக்கு ரூ.240 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த தி கேம் எல்எல்சி என்ற நிறுவனம் பல்வேறு வகையான லாட்டரிகளை நடத்தி வருகிறது.
இந்த யுஏஇ லாட்டரியின் குலுக்கல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது இதில் முதல் பரிசு பெற்றவரின் விவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் பொல்லாவுக்கு (29), ரூ.240 கோடி முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அபுதாபியில் நடந்த விழாவில் அவர் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டார்.
அப்போது லாட்டரி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் இந்தியாவை சேர்ந்தவன். கடந்த 18 மாதங்களாக அபுதாபியில் பணியாற்றி வருகிறேன். அவ்வப்போது லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். அண்மையில் யுஏஇ லாட்டரியின் 12 டிக்கெட்டுகளை வாங்கினேன். இதில் கடைசி டிக்கெட்டை எனது அம்மாவின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்து வாங்கினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது.
விலை உயர்ந்த காரை வாங்க திட்டமிட்டு உள்ளேன். எனது முதல் பரிசு கிடைத்ததை 7 நட்சத்திர ஓட்டலில் மிகப்பெரிய விழாவாக கொண்டாட உள்ளேன். இந்தியாவில் உள்ள என் தாய், தந்தையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வருவேன். போதிய பணம் இருப்பதால் நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பமாக வாழ்வோம். எனது தாய், தந்தைக்கு சில கனவுகள் உள்ளன.
அந்த கனவுகளை நிறைவேற்றுவேன். பரிசுத் தொகையில் சிறிது பணத்தை தானமாக வழங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அனில் குமார் பொல்லா சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “லாட்டரி நிறுவனத்தில் இருந்து என்னை மொபைல் போனில் அழைத்தனர். எனக்கு ரூ.240 கோடி பரிசு விழுந்திருப்பதாக கூறினர். இதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் உண்மையாகவே எனக்கு பரிசுத் தொகை கிடைத்திருப்பது தெரிந்ததும் பேரின்பத்தில் திளைத்தேன்’’ என்று தெரிவித்தார்.