ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது.
திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த காலத்தில் கூட இத்தனை அதிகாரமாக ஆட்சியில் பங்கு கேட்காத காங்கிரஸ், இப்போது உரிமைக் குரலை உக்ரமாக எழுப்ப என்ன காரணம்?
இது காங்கிரஸ் உயிர் வாழ்வதற்கும், உரிமைக்குமான கோரிக்கை. கூட்டணிக்காக நாங்கள் நிறையவே தியாகம் செய்துவிட்டோம். ஒரு கூட்டணியின் வெற்றிக்காகத்தான் கூட்டணி அமைக்கிறோம். வெற்றி பெறும் வரை நாங்கள் அவர்களோடு இருக்கிறோம். வெற்றி பெற்ற பிறகு அவர்களும், நாங்களும் வெவ்வேறாக இருக்கிறோம். ஒரு காலத்தில் 110 இடங்களை பெற்ற நாங்கள், இன்றைக்கு 25 இடங்களை கூட்டணி மூலமாக பெறுகிறோம் என்றால், இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை. எனவே இப்போதாவது இதை மாற்ற வேண்டும் என்று கருதுகிறோம்.
அப்படியானால் திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சொல்கிறீர்களா?
இன்றைக்கு இருக்கின்ற கூட்டணிகளில் திமுக, அதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக எங்களுக்கு ஒரு சரியான தோழமை என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் தான் இந்த கோரிக்கையை வைக்கிறோம்.
காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக தலைமை நெருக்கமாக இருக்கும் நிலையில், தமிழக காங்கிரஸாரின் நியாயமான கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் எதிர்வினை எப்படி இருக்கும்?
எங்களுடைய கட்சி தலைமை எங்களுடைய கருத்துகளைத்தான் ஏற்றுக் கொள்ளும். நாங்கள் வேண்டா வெறுப்பாக, சுயலாபத்துக்காக, தனிப்பட்ட விரோதங்களுக்காக இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. கட்சியின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்காக இதை சொல்லும்போது எங்களுடைய தலைமை இதை மறுதலிக்காது. எனக்கே ஒருமுறை அது போன்ற அனுபவம் ஏற்பட்ட போது நான் சொன்னதைக் கட்சி தலைமை ஏற்றுக் கொண்டது.
அது என்ன அனுபவம்… கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
நான் மாநிலத் தலைவராக இருந்தபோது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு 2 ஒன்றியங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டது. அப்போது, ‘கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டது’ என்று அறிக்கை வெளியிட்டேன். டெல்லியில் இருந்து தமிழக பொறுப்பு செயலாளர், என்னை தொலைபேசியில் அழைத்து, அந்த அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தினார்.
நான் மறுத்துவிட்டேன். உடனே என்னை டெல்லிக்கு அழைத்து அறிக்கையில் கையெழுத்திடச் சொன்னார். அப்போதும் மறுத்துவிட்ட நான், “நான் சொல்லியிருப்பது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துமானால், எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்” என்றேன்.
பிறகு சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸை விட வாக்கு சதவீதம் குறைவாக வைத்துள்ள பாமகவுக்கு அதிமுக கூட்டணியில் 25 ஒன்றியங்களை கொடுக்கிறபோது, நமக்கு திமுக கூட்டணியில் 2 ஒன்றியங்களை கொடுப்பதை ஏற்க முடியவில்லை என்பதை விளக்கினேன்.
அதை ஏற்றுக்கொண்ட சோனியாகாந்தி, “அழகிரி சொல்வது சரிதானே. பிறகு ஏன் அவரை சிரமப்படுத்துகிறீர்கள்” என்று பொறுப்பு செயலாளரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, “நீங்கள் அந்த மாநிலத்தின் தலைவர். உங்களது கருத்து அதுதான் என்றால், எங்களுடைய கருத்தும் அதேதான்” என்று சொல்லி என்னை மகிழ்ச்சியுடன் அனுப்பிவைத்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் இருக்கிறதா?
இப்போது நடைபெறும் ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சி. கொள்கை சார்ந்த ஒரு முதல்வர் இருக்கிறார், அவரை பலப்படுத்த வேண்டியது எங்களுடைய கடமை; எல்லோருடைய கடமையும் கூட. எனவே, ஆட்சி மாற்றம் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று.
நெடிய அனுபவம் கொண்டவர் என்ற முறையில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
தாங்கள் எம்எல்ஏ, எம்பி-யாக வந்தால் போதும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் நினைத்தால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைத்துவிட முடியாது. காங்கிரஸ்காரன் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும்.
அதேபோல், ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் அவரவர் உழைப்பு திறமைக்கு ஏற்ப அமைச்சர்களாக, எம்பி, எம்எல்ஏ-க்களாக வரவேண்டும் என்ற கருத்துடன் செயல்பட்டால் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர முடியும். இது முடியாத விஷயம் அல்ல. பெருந்தலைவர் காமராஜர் இதை செய்து காட்டியிருக்கிறார். எங்களாலும் முடியும். ஆனால், அதற்கான காலம் இன்னும் அமையவில்லை.