புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்திலிருந்து பிராங்க்பர்ட்டுக்கு லுப்தான்ஸா விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 28 வயதான இந்தியாவைச் சேர்ந்த பயணி பிரணீத் குமார் உசிரிபள்ளி, சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது 17 வயதான 2 இளைஞர்களை முள்கரண்டியால் (ஃபோர்க்) பிரணீத் குமார் குத்தியுள்ளார்.இதனால் விமானத்தில் உள்ளவர்கள் பீதியடைந்தனர்.
அப்போது இதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து விமானிகள், அந்த விமானத்தை பாஸ்டன் விமான நிலையத்துக்குத் திருப்பினர். அங்கு பிரணீத் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் மாணவர் விசா மூலம் பட்டமேற்படிப்பு படித்தவர். பிரணீத் குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.