புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்காஹர்) மற்றும் மேற்கு வங்கம் (கொல்கத்தா) ஆகிய 2 மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலக முகவரியுடன் (கொல்கத்தா) கூடிய வாக்காளர் பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 17-வது பிரிவின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியாது.
இந்த விதிமுறையை மீறுவது, மேற்கண்ட சட்டத்தின் 31-வது பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.