புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்வதற்கான 8-வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இக்குழு 18 மாதங்களில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மறு ஆய்வு குறித்து ஆராய 8-வது ஊதியக் குழு அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு, 8-வது ஊதியக் குழுவின் செயல்பாட்டுக்கான விதிமுறைகள் (டிஓஆர்) இறுதி செய்யப்பட்டன. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இதன்படி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்வது மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சலுகைகளில் திருத்தம் செய்வது குறித்து இக்குழு ஆய்வு செய்து பரிந்துரை அளிக்கும். 8-வது ஊதியக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழு உறுப்பினராக பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் உறுப்பினர் – செயலராக பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்து ஆய்வு செய்து 18 மாதங்களில் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை திருத்தம் செய்வதற்கு ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு அமைக்கிறது. அதன்படி 7-வது ஊதியக் குழு கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தியது. இந்நிலையில், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
2028 முதல் அமலாகும்: ஆனால், 8-வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கினால், 2028 முதல் காலாண்டுக்குள் அமலுக்கு வரும். எனினும், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிட்டு ஊதிய திருத்தங்கள் அமல்படுத்தப்படும். அதன்படி நிலுவை தொகையை மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெறுவார்கள்.மேலும், பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை அகவிலைப் படி (டிஏ) மாற்றி அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
