இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (அக்டோபர் 29) மழை காரணமாக ரத்தானது. இந்த சூழலில், இன்று (அக்டோபர் 31) மதியம் இரண்டாவது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளின் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
இதற்கு காரணம், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் கிரிக்கெட் களத்திலேயே உயிரிழந்ததுதான். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர்.
பென் ஆஸ்டின் மெல்போர்னை சேர்ந்தவர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஃபெர்ன்ட்ரீ கல்லி கிளப் அணிக்காக கடந்த செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற நெட்பிராக்டீஸ் பயிற்சியின் போது சக இணைய வீரர் ஒருவர் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டார். பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அந்த பந்து அவரது கழுத்துப் பகுதியில் நேரடியாகப் பட்டது. இதனால் நிலைகுலைந்து தரையில் விழுந்த அவரை அங்கு இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக மீட்டு மெல்போர்ன் மோனஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று (அக்டோபர் 30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக வீரர்கள் பிரேக்டீஸ் மைதானமாக இருந்த ஃபெர்ன்ட்ரீ கல்லி கிளப்பில் இன்று பென் ஆஸ்டின் நினைவாக மலர் மாலைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பேட் வைத்து மரியாதை செலுத்தினர். சமூக ஊடகங்களில் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விக்டோரிய மாநில அரசின் பிரதிநிதிகள் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒரு உள்நாட்டு போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஃபில் ஹுக்ஸ் (Phil Hughes) சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து கழுத்தில் பட்டதால் மரணமடைந்தார். அந்த சம்பவத்திற்கு பின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தலையில் அல்லது கழுத்தில் பந்து பட்டால் உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாய விதி அமல்படுத்தப்பட்டது. மேலும் ஹெல்மெட்டுகளின் பின்புறத்தில் கூடுதல் பாதுகாப்பு தகடுகள் சேர்க்கப்பட்டன. அந்த மாற்றங்களுக்கு மத்தியில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
About the Author
R Balaji