“இனவெறி பாகுபாட்டின் உச்சம்'' – மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், மறுபக்கம் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று மோடி தனது பிரசாரத்தின் போது, தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மோடி பிரசாரம் - பீகார்
மோடி பிரசாரம் – பீகார்

மோடியின் இத்தகைய பேச்சுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் சீமான்ப் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர் என பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யை பரப்புவது, தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். இது இனவெறி பாகுபாட்டின் உச்சம்.

தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஏற்கனவே ஒடிசா மாநிலத் தேர்தலின்போது, தமிழர்களைத் திருடர்கள் என்றும், ‘ஓடிசாவை தமிழன் ஆளலாமா?’ என்றும் இனவெறியை விதைத்த மோடி, அதன் நீட்சியாக தற்போது தமிழர்களை வன்முறையாளர்களாக கட்டமைப்பது, தமிழினத்தை இழிவுப்படுத்தும் கொடுஞ்செயலாகும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகமெங்கும் நேசித்து நின்ற ஓர் இனத்தை திருடர்கள், வன்முறையாளர்கள் என குற்றம் சுமத்துவது, தமிழ் இனத்திற்கு செய்யப்படும் பச்சைத்துரோகமாகும்.

தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக வெளியான காணொளிகள் அனைத்தும் பொய்யானது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது – இது மோடிக்கு தெரியாதா?

உங்கள் கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார் அரசு அனுப்பிய ஆய்வுக்குழு, தமிழ்நாட்டில் அப்படி எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தது – அதும் தெரியாதா?

அவையெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு அவதூறைப் பரப்புவது தமிழர் விரோதப் போக்கன்றி வேறென்ன?”

பீகாரிகள் உள்ளிட்ட வடமாநிலத்தவரால் தமிழர்கள்தான் தாக்கப்படுகின்றனர் என்பது மோடிக்குத் தெரியுமா?

இத்தனை காலமாக மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து பிளந்த பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும், இனி அது எடுபடாது என்று தெரிந்தவுடன் வடமாநில மக்களின் வாக்குகளைப் பெற, இந்தி பேசும் மக்களிடம் இனவெறியைத் தூண்டுகின்றனர்.

இந்திய பிரதமரின் பொய்ப்பேச்சு, தமிழர்களைத் திருடர்கள், வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் எண்ண வழிவகுக்காதா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே இத்தகைய அவதூறைப் பரப்பி வருகிறாரா?

இதுதான் பிரதமர் மோடி தமிழர்களுக்குத் தரும் மதிப்பா? இதிலிருந்து இந்திய நாடும், பிரதமரும், அரசும், ஆட்சியாளர்களும் இந்தி பேசும் மக்களுக்கானது மட்டுமே என்பதும், தமிழர்கள் இந்நாட்டின் இரண்டாம் தரக் குடிமக்கள்தான் என்பதும் மீண்டும் மீண்டும் உறுதியாகிறது.

இதையெல்லாம் காணும் தமிழ் இளையோருக்கு இந்த நாட்டின் மீதும், அதன் ஆட்சிமுறையின் மீதும் வெறுப்புதான் வருமே, அன்றி எப்படி பற்று வரும்?

இனியும் பிரதமர் மோடியின் தமிழர்கள் மீதான வெறுப்புப் பேச்சு தொடருமாயின், அது “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, நாட்டினைப் பெரும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறேன்.

சீமான்
சீமான்

ஆகவே, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற இனவெறிப் பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், ஒடிசா தேர்தலுக்காக தமிழர்களைத் திருடர்களாகவும், பீகார் தேர்தலுக்காக தமிழர்களை வன்முறையாளர்களாகவும் கட்டமைக்கும் பா.ஜ.க-வுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.