சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிதி பொறுப்புடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், மசோதாவை திருப்பி அனுப்பினார். அப்போது, ”இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதியாண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல” என கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இந்த மழைக்கால சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஆளுநரின் கருத்துக்களை நிராகரித்ததுடன், மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா உட்பட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள், கடல் சார் வாரியம், தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை வரி திருத்த மசோதாக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்சி-க்களுக்கான ஓய்வூதிய உயர்வுக்கான தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா, பல்வேறு வழக்கிழந்த சட்டங்களை நீக்குவதற்கான இரு சட்ட மசோதாக்கள் உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.