திண்டுக்கல்: “மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் திமுகவினர் எதிர்க்கின்றனர்” என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் இன்று (அக்.31) கூறியது: “தமிழ்நாடு மக்கள் யார் வந்தாலும் வரவேற்கும் எண்ணம் கொண்டவர்கள். தமிழ் மக்கள் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். கூட்டணி குறித்து பெரிய கட்சிகளே இன்னும் முடிவு எடுக்காத நிலை உள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். அவர்களுடன் தொடர்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பொதுக்குழு கூட்டி முடிவு செய்வார். அரசியலில் 15 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களுக்கு பின்பு தற்போது தான் நாங்கள் நிலைத்தன்மைக்கு வந்துள்ளோம். அதேபோல், தவெக கட்சியை தொடங்கியுள்ள விஜய்யும் பொறுமையாக இருக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் தானியத்தை சேமிக்க வேண்டியது அரசின் கடமை. அதனை வேகமாக செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இலவசம் தேவைப்படாத சூழ்நிலையை இந்திய ஜனநாயக கட்சி உருவாக்கும்.
அரசியலில் பலர் சம்பாதிக்கும் நோக்குடன் வருகின்றனர். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை மக்கள் பணி மேற்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் திமுகவினர் எதிர்க்கின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று அவர் கூறினார்.