சென்னை: “பொறாமை பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து, ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: “மோடியின் பேச்சு, பிஹார் மாநில மக்களிடையே தமிழர்கள் மீது அவநம்பிக்கையையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொய் பிரச்சாரத்தின் மூலமாக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் பிரதமர் செயல்படுகிறார். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய இடத்திலும், பிளவுகளைச் சரி செய்ய வேண்டிய இடத்திலும்தான் பிரதமர்கள் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதாரண நகராட்சி உறுப்பினருக்குக் கூட, சாதியின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மாநிலத்தின் அடிப்படையிலோ பிரச்சினைகளைப் பேசுகின்ற குறுகிய மனப்பான்மை ஏற்படாது. இத்தகைய எண்ணம் பிரதமருக்கு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இது மோடிக்கு புதிதல்ல, ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஆங்காங்கே போய் இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது பாஜகவுக்கும் குறிப்பாக மோடி மற்றும் அமித் ஷாவுக்கும் கை வந்த கலை. அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவரை மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள்.
ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, பூரி ஜெகந்நாதர் கோவிலின் சாவி தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்று சொல்லி, தமிழர்கள் எல்லாம் திருடர்களைப் போல ஒடிசா மக்கள் மத்தியில் சித்தரித்துக் காட்டினார் மோடி. அதை மிஞ்சும் வகையில் அமித் ஷா, “இங்கே வி.கே.பாண்டியன் என்கிற ஒரு தமிழன்தான் ஆட்சி புரிகிறார். ஒடிசாவில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? மானம் இல்லையா? ஒரு தமிழ்நாட்டுக் காரன் தான் இந்த மாநிலத்தை ஆள வேண்டுமா?” என்று கேட்டவர் அமித் ஷா.
இதேபோலத் தான் ஒடிசா தேர்தலுக்கு எப்படி ஒரு தமிழரை இழிவுப்படுத்திப் பேசினார்களோ, அதேபோல பிஹாரில் தமிழ்நாட்டையும், தமிழர்களையும், குறிப்பாக திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் மையப்படுத்தி மோடி பேசியிருக்கிறார். இந்த தமிழ்நாட்டில் எங்கேயாவது பிஹார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்கு உரிய ஆதாரம் இருந்தால், அவர் வழக்கு தாக்கல் செய்யட்டும்.
இதேபோல்தான், 2023-ம் ஆண்டு ஒரு பொய்யான கூச்சலைத் தமிழ்நாட்டில் கிளப்பினார்கள். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பிஹார் மாநில மக்கள் தாக்கப்படுவதாகப் பொய்யான செய்திகள் யூடியூப்பில் வெளியிடப்பட்டன. இது சம்பந்தமாக பிஹாரைச் சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இந்தச் செய்தி வந்தவுடன், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சிறப்புப் படையைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார். அந்தப் படை, பிஹாரிகள் தாக்கப்படுவது உண்மையா என்று நேரடியாக ஆய்வு செய்தது. அந்த ஆய்வு அறிக்கை என்னவென்றால், “தமிழ்நாட்டில் பீஹாரிகள் நிம்மதியாகவும், சிறப்பாகவும், எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள்” என்று கூறியது.
ஆனால், பிரதமராக இருப்பவர் இதைப் புரிந்துகொள்ளாமல் பொய் சொல்கிறார் என்றால், இது ஒவ்வொரு குடிமகனும் தலைகுனியக்கூடிய அளவுக்கு இருக்கிறது. மத்திய கல்வித் துறை அமைச்சராக இருக்கக்கூடிய தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டுக்காரனுக்கு “நாகரிகமே கிடையாது” என்று சொன்னார்.
அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் தாக்கப்படுவதை போல இங்கேயும் தாக்கப்படுகிறார்கள் என்று சொன்னபோது, அதற்கு ஒரு பாஜக எம்.பி. பகிரங்கமாக, “நாங்கள் அப்படி கிடையாது; தென்னாட்டைச் சார்ந்தவர்கள் எல்லாம் கருப்பாய் இருக்கிறார்கள், அவர்களோடு நாங்கள் வாழவில்லையா?” என்று தென்னாட்டுக் காரர்களை எல்லாம் இழிவுப்படுத்திப் பேசினார். பெங்களூரில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற ஓர் உணவகம் தாக்கப்பட்டபோது, ஒரு பாஜக பெண் அமைச்சர், “தமிழ்நாட்டுக்காரன் தான் இதைச் செய்திருக்க வேண்டும்” என்று சொன்னார். தமிழன் என்றால் இவ்வளவு கேவலமா?.
திமுக கூட்டணி நாற்பதற்கு நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்றதற்காக, கொடுக்க வேண்டிய நிதியும், கல்வித் துறைக்கு கிடைக்க வேண்டிய பணமும் மத்திய அரசால் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்குக் கொடுப்பதற்குப் பதிலாக, நாங்கள் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு 29 காசுகள் தான் திருப்பித் தரப்படுகிறது. ஆனால், பிஹாருக்கு ஒரு ரூபாய்க்கு 7 ரூபாய்கள் வரை கொடுக்கிறார்கள்.
இருப்பினும், மோடி திமுக மீது பழி சொல்ல எண்ணுகிறார். ஏனென்றால், நிதியைக் கொடுக்காமலேயே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி 11.19% பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. பிஹாரை 15 முதல் 20 ஆண்டு காலம் ஆண்ட பாஜகவாலும், அதன் கூட்டணியாலும் அங்கே வளர்ச்சி ஏற்படவில்லை. இதை மக்கள் கேட்கப் போகிறார்கள் என்பதற்காகவே மோடி இப்படி திசை திருப்புகிறார்.
பிஹாரைச் சார்ந்த ஜியா குமாரி என்கிற பெண்மணி, சென்னைக்கு அருகே இருக்கும் கவுல்பஜார் அரசுப் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பில் தமிழில் 100-க்கு 93 மதிப்பெண்கள் வாங்கி, தான் இங்கேயே படித்து மருத்துவராக வேண்டும் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.
திமுக இந்தி திணிப்பைத் தான் எதிர்த்தது, எந்த காலத்திலும் இந்தி மொழியையோ, இந்திக்காரர்களையோ எதிர்த்ததில்லை. சென்னையில் 30- 40% மக்கள் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வசதி வாய்ப்போடு இருக்கிறார்கள். தொழிலாளர்களும் நிம்மதியாக, எந்த விதமான கவலையும் இல்லாமல் இரவு நேரத்தில் கூட வேலை செய்துவிட்டுச் செல்கிறார்கள்.
இவ்வளவு பாதுகாப்பாக ஆட்சி நடத்துகிற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீது திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. ஒவ்வொரு தமிழரும் இதை உணர்ந்து மோடிக்கு எதிரான கண்டனக் குரலை எழுப்புவார்கள். பிரதமர் மோடியால் செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் ஒரு மாநிலத்தினுடைய முதல்வர் செய்து இந்தியா முழுக்க ’ஃபேமஸ்’ ஆகி வருகிறார். கலைஞர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார்.
மேலும், பெரியாருடைய கருத்துகள் இந்தியா முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. டெல்லி பல்கலைக் கழகத்தில் பெரியாருடைய விழா நடப்பது, முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு பிறகு தான் நடக்கிறது. இந்த பொறாமை பயத்தின் காரணமாகத்தான் ஸ்டாலின் மீது குறிவைத்து, ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது.
பிஹார் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்தும், முதல்வர் ஸ்டாலினின் செல்வாக்கோ, திமுக கூட்டணினுடைய செல்வாக்கோ குறையவில்லை. ஒழுங்காக பீகாரில் வேலை வாய்ப்பை அளித்திருந்தால், அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஏன் வரப்போகிறார்கள்? நீங்கள் உங்கள் மக்களைக் காப்பாற்றத் தவறியதற்கு எங்கள் மீது பழி போடுவதா? தமிழ் மண் பிஹார் மக்களைக் காப்பாற்றுகிற மண்” என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.