கோலாலம்பூர்: அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ – பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று மலேசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கடந்த 2010-ல் ஹனேயில் தொடங்கப்பட்டபோது அது தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மன்றம், உரையாடல்களுக்கான தளமாக இருப்பதற்கு அப்பால், நடைமுறை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பாக மாறி உள்ளது.
உள்ளடக்கிய மற்றும் நிலையான பாதுகாப்பு என்ற தலைப்பிலான இந்தக் கூட்டம், மிகவும் சரியான நேரத்தில் மலேசியாவில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானதாகும். பாதுகாப்பில் உள்ளடக்கம் என்பது அனைத்து நாடுகளும், அவற்றின் அளவு மற்றும் திறனைப் பொருட்படுத்தாமல் பிராந்திய ஒழுங்கை உருவாக்குவதிலும் பயனடைவதிலும் சம பங்காளிகளாக மாறுவதாகும். நிலைத்தன்மை என்பது அதிர்ச்சிகளைத் தாங்கும், புதிய சவால்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நீண்ட கால ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதாகும்.

இந்தியாவின் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு தொலைநோக்குப் பார்வை, பாதுகாப்பு ஒத்துழைப்பை பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப பகிர்வு, மனிதவள முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறது. பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த தொடர்புதான் இந்தியா – ஆசியான் கூட்டாண்மையின் உண்மையான ஆன்மா.
இந்தியாவை பொறுத்தவரை, ஆசியான் – இந்தியா பாதுகாப்பு கூட்டாண்மை என்பது அதன் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் பரந்த இந்தோ – பசிபிக் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். 2022ல் ஆசியான் – இந்தியா கூட்டாண்மை விரிவான மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டபோது, அது அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாக மட்டுமின்றி, பிராந்திய முன்னுரிமைக்கான ஆழமான சான்றாகவும் இருந்தது.
இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது. திறந்த, உள்ளடக்கிய, விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ – பசிபிக் என்பதே அது. எதிர்கால பாதுகாப்பு ராணுவத்திறனை மட்டும் சார்ந்திருக்காது. பகிரப்பட்ட வளங்களை நிர்வகித்தல், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு கூட்டுப் பதில் அளித்தல் ஆகியவற்றையும் சார்ந்திருக்கும்.” எனத் தெரிவித்தார்.