ஸ்ரீகாகுளம்: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கியதில் பலர் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இது எங்களை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஏகாதசி நாளில் எங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு அரசு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகள், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அச்சன்நாயுடு மற்றும் உள்ளூர் எம்எல்ஏ கவுது ஷிரிஷ் ஆகியோரிடம் பேசினேன். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி உதவி வழங்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.