ராய்ப்பூர்: உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்குச் செல்லும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூரில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் தியான மையமான சாந்தி ஷிகார்-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று உலகில் எங்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டாலும், எங்கு ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் உதவி வழங்க ஒரு நம்பகமான கூட்டாளியாக இந்தியா உள்ளது. இந்தியா எப்போதும் உதவிக்கு முதலில் செல்கிறது.
ஒவ்வொரு உயிரினத்திலும் கடவுளைக் காண்பவர்கள் நாம். நமது பாரம்பரியத்தில், உலகம் செழிக்கட்டும், அனைத்து உயிரினங்களிடையேயும் நல்லெண்ணம் மேலோங்கட்டும் என்ற பிரார்த்தனையுடன்தான் எந்த ஒரு மத நிகழ்வும் முடிவடைகிறது.
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது. இந்தியாவை வளர்ச்சி பெற வைப்பதற்கான பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இந்த பயணத்தில் பிரம்ம குமாரிகள் போன்ற அமைப்புகள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. நான் பல பத்தாண்டுகளாக உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன். நான் இங்கு விருந்தினராக வரவில்லை. நான் உங்களில் ஒருவன்.
இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று சத்தீஸ்கர் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட், உத்தராகண்ட் மாநிலங்களும் இன்று 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இந்த மாநில மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.
முன்னதாக, நவ ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் கலந்து கொண்டார்.