கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள கோடந்தூரில் தனியார் கிரஷர் செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இன்று (நவ.1) அதிகாலை 5 மணிக்கு எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு லாரி கோவை புறப்பட்டது.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த சந்தனகுமார் (41) லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். தென்னிலை அருகே முதலிகவுண்டம்பாளையம் அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் எம் சாண்ட் மீது அமர்ந்து பயணம் செய்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிக்கந்தர் கேட்டா (21), வித்யநாத் பிரபாகரன் (47), அஜய் பங்கரா (30) ஆகிய 3 பேரும் எம் சாண்ட் குவியலில் சிக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பல்ஜெம்ஸ் பர்வா (30) கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தென்னிலை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்த காயமடைந்த பல்ஜெம்ஸ் பர்வாவை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.