சட்டோகிராம்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன தன்சித் ஹசன் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய வங்காளதேச அணி 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தன்சித் ஹசன் 89 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோமரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் மற்றும் காரி பியர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அலிக் அதானேஸ் ஒரு ரன்னிலும், பிரண்டன் கிங் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரார் ஆன ஆமிர் ஜாங்கோ தனது பங்குக்கு 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இருப்பினும் கேப்டன் ரோஸ்டன் சேஸ் (50 ரன்கள்) மற்றும் அக்கீம் அகஸ்டே (50 ரன்கள்) இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். 16.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் முழுமையாக கைப்பற்றி வங்காளதேச அணியை ஒயிட்வாஷ் செய்தது.