பாட்னா: ‘பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து சமூகப் பிரிவுகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்’ என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் வெளியிட்ட வீடியோ செய்தியில், “நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் 15 ஆண்டுகாலம் காட்டாட்சி நடத்தியது. அதன்பிறகு வந்த எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த பாடுபட்டது.
ஆர்ஜேடி ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது. எங்கள் ஆட்சியில் முதலாவதாக, அதை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் நிலைமை கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி பெண்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதையும், அவர்களை சுதந்திரமாக்குவதையும் உறுதி செய்தது. ஆரம்பத்திலிருந்தே, இந்துக்கள், முஸ்லிம்கள், உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் மற்றும் மகா தலித்துகள் என அனைத்து சமூகப் பிரிவுகளின் வளர்ச்சிக்காகவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடுகிறோம்.” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முன்னர் பிஹாரி என்று சொல்வது அவமானமாக இருந்தது. இப்போது அது மரியாதைக்குரிய விஷயமாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிஹாரின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஆதரவை அளித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே பிஹாரை வளர்க்க முடியும். மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கள் இருப்பதால் வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், பிஹார் மேலும் வளர்ச்சியடையும்.
எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். பிஹார் சிறந்த மாநிலங்களில் சேர்க்கப்படும் வகையில் நாங்கள் வளர்ச்சியை உருவாக்குவோம். எனவே, தயவுசெய்து அதிகபட்ச எண்ணிக்கையில் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்.” என்று அவர் கூறினார்.
243 சட்டமன்ற இடங்களைக் கொண்ட பிஹாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக மற்றும் ஜேடியு தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 28 இடங்களில் போட்டியிடுகிறது. மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலா 6 இடங்களில் போட்டியிடுகிறது.