சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறுதியேற்றனர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகிகள் நாளாகவும், தமிழ்நாடு நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆழ்ந்த ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட தமிழகம் உருவான தினத்தில் தமிழக மக்களுக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள். விவசாயிகள், மீனவர்,கைவினைஞர்,நெசவாளர்,தொழில்முனைவோர், விஸ்வகர்மாக்கள் தங்களது திறமைமூலம் தமிழகத்தை புதிய சகாப்|தத்தை நோக்கி எடுத்துச்செல்கின்றனர். தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாம் வாழும் தமிழகத்தின் பல பகுதிகளை நமக்காக போராடிப் பெற்றுத் தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். போராடாவிட்டால் நமக்கு சொந்தமான நிலம்மட்டுமல்ல, வாக்குரிமையே கூடபறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழிகளில் தமிழகத்தின் உரிமைகளை காப்போம். தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்நாளை பெருவிழாவாக, திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும். தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கவும் உலகத் தமிழர்கள் யாவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழர்களின் மொழி, இன, பண்பாட்டு அரசியல் அடையாளங்களை பேணி பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் உறுதி ஏற்போம்.
தவெக தலைவர் விஜய்: தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களை நினைவுகூர்வோம். மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழகத்தை மீட்போம். இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சாதி, மத,இன வேறுபாடுகளின்றி தமிழர் என்ற உணர்வோடு பாடுபட்டு அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க உறுதியேற்போம்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மூவேந்தர் கொடிகளுடன் எல்லை மீட்புபோராளிகளுக்கு வணக்கம் செலுத்தி விழாவாக தமிழ்நாடுநாளைக் கொண்டாடுவோம்.