ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது ட்ரேடிங் குறித்த செய்திகள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேற போவதாக வெளியாகும் தகவல்கள் ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இவரை கைப்பற்ற ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த போட்டியில் முன்னிலை வகிக்கிறது.
Add Zee News as a Preferred Source

டெல்லி அணிக்கு திரும்புகிறாரா சாம்சன்?
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழுவில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், சாம்சன் அணியை விட்டு வெளியேறும் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம், ராஜஸ்தான் அணியுடன் ஒரு பெரிய டிரேடுக்கு நெருங்கிவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சஞ்சு சாம்சன் தனது முன்னாள் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்புவார். அவருக்கு பதிலாக, டெல்லி அணியின் அதிரடி வீரரான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கே.எல். ராகுலை டிரேடு செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் டெல்லி அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்து கொள்ளவே முன்னுரிமை அளித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்ட ராகுல், அந்த சீசனில் 13 போட்டிகளில் 539 ரன்கள் குவித்து அசத்தினார்.
கேப்டனாகவே டிரான்ஸ்ஃபர்?
சஞ்சு சாம்சனின் இந்த அணி மாற்றம் உறுதியானால், ஒரு அணியின் கேப்டனாக இருந்து கொண்டே மற்றொரு அணிக்கு டிரேடு செய்யப்படும் முக்கிய வீரர்கள் பட்டியலில் அவரும் இணைவார். 2021 ஐபிஎல் சீசனுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சாம்சன், தனது தலைமையில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார். குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றது அவரது கேப்டன்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். எனினும், இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது.
ராஜஸ்தான் அணியின் தூண்
ராகுல் டிராவிட் வழிகாட்டுதலின் கீழ், 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இளம் வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் தனது பயணத்தைத் தொடங்கினார். தனது அதிரடி ஆட்டத்தால் குறுகிய காலத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர், 2014 ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு தேர்வானார். இடையில் சில காலம் வேறு அணிக்காக விளையாடிய அவர், 2018 மெகா ஏலத்தில் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கே திரும்பினார். ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பிறகு 2021ல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
புள்ளிவிவரங்களின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக சாம்சன் திகழ்கிறார். அந்த அணிக்காக 149 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,027 ரன்கள் குவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 3,500 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது கேப்டன்சியின் கீழ், அணி 67 போட்டிகளில் 33 வெற்றிகளையும் 32 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க வீரர் அணியை விட்டு வெளியேறுவது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark