“அதிமுக – தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'' – டிடிவிதினகரன்

`SIR குறித்து ஏன் பயம்?’

திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,

“எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கலந்து கொள்வோம். தி.மு.க நடத்தியதால் கலந்து கொள்ளவில்லை.

பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர்-ல் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தெரிவித்தனர். பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி உள்ளது. அதனால், அங்கு குளறுபடிகள் நடந்திருக்கலாம்.

ஆனால், தமிழ்நாட்டில தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் தான் கணக்கெடுக்க போகிறார்கள். அதை நேர்மறையாக பார்க்கலாம். பயத்தில் பார்க்க தேவையில்லை.

தி.மு.க ஆட்சியில் எந்த தவறும் செய்திட முடியாது. தமிழ்நாட்டில எல்லா கட்சிகளும் விழிப்புடன் இருப்பார்கள்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஏ 1 என்றால், அவரை கைது செய்யலாம் என திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க-வை காக்க வந்தவர் டி.டி.வி என பேசிவிட்டு, ஏப்ரல் மாதத்தில் என்னை நீக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி.

என்னை நீக்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு நாங்கள் இணைந்து சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தோம்.

அடுத்த மூன்று நாள்களில் என்னை கட்சியிலிருந்து நீக்கினார். மூன்று நாள்களில் நான் என்ன துரோகம் செய்திருப்பேன்?. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க மனமின்றி பலர் தப்பிக்க பார்த்தார்கள்.

அவர்களை அழைத்து வந்தது நான் தான். நான், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து என்பதால் எங்களை கட்சியிலிருந்து நீக்கினார்.

முதல்வராக்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி ஒருவேளை அ.தி.மு.க – த.வெ.க கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால், விஜயையும் காலி செய்து விடுவார்.

தி.மு.க-வின் B டீம்

கடந்த 2021 – ம் வருட தேர்தலின் போது தற்போதைய முதல்வர் தான் பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் பெருக்கடுத்து ஓடுகிறது என கூறினார். கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்போம் என்றார். ஆனால், பழனிச்சாமி மீது இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருப்பது தான் எங்களுக்கு நல்லது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். இதிலிருந்து, தி.மு.க-வின் B டீமாக செயல்படுபவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது தெரிகிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

துரோகம்

செங்கோட்டையனை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர். துரோகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க என்கிற இயக்கம் இன்று துரோகி கையில் சிக்கி உள்ளது.

அதை, அக்கட்சி தொண்டர்கள் உணரவில்லை என்றால் ஆண்டவனாலும் அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாது.

அ.தி.மு.க-வை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அ.ம.மு.க-விற்கு இருக்கிறது. EDMK-வாக இருக்கும் அந்த கட்சிதை ADMK -வாக மாற்றுவோம்.

துரோகத்திற்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றால், அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தர வேண்டும். அ.தி.மு.க-வில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் மெளன விரதத்திலும், தியானத்திலும் இருக்கிறார்கள்.

டெல்லியிலிருந்து யாராவது வந்து அனைவரையும் சேர்த்து விடுவார்கள் என நம்பி கொண்டுள்ளார்கள். வரும் தேர்தலோடு எடப்பாடி பழனிச்சாமியும், அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களும் வீழ்ந்து விடுவார்கள்.

நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கட்சிக்கு நான்தான் வழிகாட்டல் கொடுக்க முடியும். பா.ஜ.க கொடுக்க முடியாது. செங்கோட்டையன் பட்டியலில் அடுத்தடுத்து யார் இணைய போகிறார்கள் என்று கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.