பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியை திருடிவிட்டதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக்க சொல்லி யாரும் மிரட்ட முடியாது என்றும் அவர் கூறினார்.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியைத் திருடிவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் காங்கிரஸை மிரட்டி தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்டாயப்படுத்தியதாகவும் நேற்று பிஹாரின் அர்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இதெல்லாம் பொய், பிரதமர் மோடியால் இதைத் தவிர வேறு எதுவும் சொல்லமுடியாது. இதற்கு நான் இன்று பிஹாரில் பதில் சொல்வேன். துப்பாக்கி முனையில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக்க சொல்லி யாரும் மிரட்ட முடியாது. காங்கிரஸ் இதை ஒருபோதும் செய்ததில்லை.
மோடி இந்த நாட்டின் பிரதமர்; அவர் இதுபோன்ற விஷயங்களைச் சொல்வது நகைப்புக்குரியது. இது அவரது நிலையைக் காட்டுகிறது. ஒரு பிரதமர் பேச வேண்டியதையெல்லாம் மறந்துவிட்டு, பிஹாரில் அவர் இதுபோன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.” என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலையில் பிஹாரின் ராஜா பக்கரில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.