பெங்களூரு: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதல்வர் மாற்றம் தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, “பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கலாம். கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக கட்சித் தலைமை இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து பிஹார் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமையிடம் ஆலோசிக்கப்படும்.” என சித்தராமையா தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வீர்களா என்ற கேள்விக்கு, “பிஹார் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் நான் செல்வேன். இந்த முறை எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறேன். பிஹாரில் ஆட்சிக்கு எதிரான மனநிலை, பாஜகவின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவை ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதிகளைப் பின்பற்றி பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. கர்நாடகாவில் கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் 1.24 கோடி பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படுகிறது. இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தவர். அவருக்கு கொள்கை எதுவும் கிடையாது. பிஹாரில் ஏழ்மை ஒழிக்கப்படவில்லை. எனவே, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.” என சித்தராமையா தெரிவித்தார்.