சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் இணைப்பு கற்கள் அமைக்கும் பணிக்காக 2025-26 நிதியாண்டில் 3,908 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 2,790 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது 207 சாலைகளில் சிமென்ட் கான்கிரீட் மற்றும் இணைப்பு கற்களைக் கொண்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து தட சாலைகளில், 79 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 63 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டன.
தற்போது ஒரு சாலையில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மின் வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் சாலை வெட்டு மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் 4,072 சாலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் 3,562 சாலை வெட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. 489 சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பேருந்து தட சாலைகளில் 105 சாலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் 95 சாலைகளில் சாலை வெட்டு சீரமைக்கப்பட்டு, 10 சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்குப் பருவமழை காரணமாக உட்புற சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை சீரமைக்க 15 மண்டலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் வீதம் மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சேதமடைந்த 5,147 இடங்கள் கண்டறியப்பட்டு, 4,503 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 667 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேருந்து தட சாலைகளை சீரமைக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சேதமான 432 இடங்களில், 349 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 83 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறை பணிகளால் சேதமடைந்த வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை ரூ.5 கோடியிலும், ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகளின் போது சேதமடைந்த பகுதிகள் ரூ.7 கோடியிலும், சூளை டிமெல்லோஸ் சாலையில் சேதமடைந்த பகுதிகள் ரூ.1.91 கோடியிலும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.