பாட்னா: ‘‘பிஹாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்த 2 மாதங்களுக்குள், என்டிஏ தஞ்சம் அளித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் மாநிலம் மொகாமா சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் ஐஜத கட்சி வேட்பாளர் ஆனந்த் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஆனந்த் சிங்கை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாபந்தன் கூட்டணி வெற்றி பெறும். ஆட்சி அமைத்த பிறகு 2 மாதங்களுக்குள் பாட்னா மாவட்டத்தின் மொகாமா தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆனந்த் சிங் உட்பட என்டிஏ கூட்டணி அரசு தஞ்சம் அளித்த கிரிமினல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதி, மதம் என பாரபட்சம் பார்க்காமல் கிரிமினல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது கண்டிப்பாக நடக்கும்.
பிஹாரில் தற்போது மகா காட்டாட்சி நடைபெறுகிறது. பிஹாரில் துப்பாக்கிச் சூடு நடைபெறாத நாளே இல்லை. பிஹார் தேர்தல் முடிவுகள் 14-ம் தேதி வெளியாகும். மகாபந்தன் கூட்டணி நவம்பர் 18-ம் தேதி பதவியேற்கும். அதன்பிறகு நவம்பர் 26-ம் தேதியில் இருந்து ஜனவரி 26-ம் தேதிக்குள் கிரிமினல்களை, மோசடிக்காரர்களை சிறைக்கு அனுப்புவேன். கிரிமினல்களுக்கு என்டிஏ அடைக்கலம் கொடுக்கிறது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.
மொகாமா தொகுதியில் ஆனந்த் சிங் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5 முறை எம்எல்ஏ.வாக இருந்தார். இவர் மீது 28 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவரது மனைவி நீலம் தேவி ஆர்ஜேடி எம்எல்ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில் தேஜஸ்வி யாதவின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நித்தியானந்த் ராய், பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.