ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தனது முதல் ஐசிசி உலகக்கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய வீராங்கனைகள் கோப்பையை முத்தமிட்டனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைக் கண்டு, மைதானத்தில் நேரில் வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர் சிந்திய தருணம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை நெகிழ செய்தது.
Add Zee News as a Preferred Source
இறுதி போட்டியின் பரபரப்பான நிமிடங்கள்
மழை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷஃபாலி வர்மாவின் அதிரடியான 87 ரன்கள் மற்றும் தீப்தி சர்மாவின் அபாரமான 58 ரன்கள் பங்களிப்புடன், 298 ரன்கள் குவித்தது. ஷஃபாலி வர்மா, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்காவின் முன்னணி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, கேப்டன் லாரா வோல்வார்ட் சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஒரு கட்டத்தில் போட்டி தென்னாப்பிரிக்காவின் பக்கம் செல்வது போல் தெரிந்தாலும், தீப்தி சர்மா தனது சுழற்பந்து வீச்சால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த வோல்வார்ட்டின் விக்கெட்டை வீழ்த்திய அவர், அடுத்து வந்த வீராங்கனைகளையும் சொற்ப ரன்களில் வெளியேற்றினார். இறுதியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு அற்புதமான கேட்சைப் பிடிக்க, இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கண்ணீரில் கரைந்த ரோஹித் சர்மா
இந்திய அணி வெற்றி பெற்ற அந்த நொடியில், மைதானமே கொண்டாட்டத்தில் அதிர்ந்தது. வீராங்கனைகள் ஒருவரையொருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீருடன் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அந்த நேரத்தில், கேமராக்கள் மைதானத்தில் இருந்த ரோஹித் சர்மாவின் பக்கம் திரும்பின. இந்திய மகளிர் அணியின் இந்த வரலாற்று சாதனையை கைதட்டி பாராட்டி கொண்டிருந்த ரோஹித், அடுத்த கணமே உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். வானவேடிக்கைகள் மைதானத்தை ஒளிர செய்ய, அவர் வானத்தை பார்த்தபடி ஆனந்த கண்ணீரைத் துடைத்து கொண்ட காட்சி அனைவரையும் நெகிழச்செய்தது.
Dinesh Karthik said in commentary box: “Rohit Sharma actually told me last night that he’d come to the ground today because he wanted to feel what it’s like to win a World Cup at home.” pic.twitter.com/C5yWCuZtRo
—@rushiii_12) November 2, 2025
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை இழப்பதன் வலி ரோஹித் சர்மாவை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 2023ல் அகமதாபாத்தில் நடந்த ஆடவர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்வியின் வடு இன்னும் ஆறாத நிலையில், மகளிர் அணியின் இந்த வெற்றி அவருக்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்தது. இந்த வெற்றி, ஹர்மன்ப்ரீத் கவுர் அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டுக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரம். 2005 மற்றும் 2017ல் இறுதி போட்டியில் அடைந்த தோல்விகளுக்குபிறகு, 2025-ல் இந்திய மகளிர் அணி சிகரத்தை தொட்டுள்ளது. ரோஹித் சர்மாவின் ஆனந்த கண்ணீர், இந்திய கிரிக்கெட்டின் ஒற்றுமையையும், பெருமையையும் பறைசாற்றும் ஒரு அழகான தருணமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
About the Author
                  
                  RK Spark