தெலுங்கானா கோர விபத்து: 3 சகோதரிகள் பலியான பரிதாபம் – சோகமான திருமண வீடு

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை அரசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 20 பேர் பலியான நிலையில், அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்று தெரிய வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.

அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஐதராபாத் அருகே உள்ள தாண்டூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.

திருமணம் முடிந்தபின் நேற்று காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.

இதனால் நான்கு மகள்களில் ஒரு மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய எல்லையா கௌடு குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கியது. எப்போது விடுமுறைக்கு வந்தாலும் 3 சகோதரிகளும் ரெயிலில் செல்வதுதான் வழக்கம். ஆனால் நேற்று அவர்கள் பஸ்சில் புறப்பட்டு உள்ளனர். அவர்களது தந்தை எல்லையா அதிகாலையில் தனது மகள்களை பஸ்சில் ஏற்றி விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். ஆனால் விபத்தில் 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

இதுகுறித்து எல்லையா வேதனையுடன் கூறுகையில், திருமணத்திற்காக 3 பேரும் சொந்த ஊருக்கு வந்தனர். அதிகாலை நேரத்தில் பஸ்சில் அவர்களை ஏற்றிவிட்டு வீட்டுக்கு சென்றேன். சிறிது நேரத்திற்கெல்லாம் டி.வி.யில் விபத்து குறித்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்தேன். இப்படி என் மகள்களை பிணங்களாக பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது அப்பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.