15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Voter ID : எல்லா ஆவணங்களும் ஒருவரிடம் சரியாக இருந்தால், இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) பெறுவது மிக எளிது. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவது மிக மிக எளிதாக்கியுள்ளது. அதன்படி, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையில் விவரங்கள் மாற்றத்துக்கும் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும். இதனையடுத்து, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உங்கள் வீடு தேடி புதிய வாக்காளர் அடையாள அட்டையும் வரும். முன்பு ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்த நிலை தற்போது மாறிவிட்டது. இந்த புதிய முறையில், விண்ணப்பிக்கும் முதல் விநியோகம் வரை எல்லா தகவல்களும் உங்களுக்கு எஸ்எம்ஸ் மூலம் கிடைக்கும்.

Add Zee News as a Preferred Source

வாக்காளர் அடையாள அட்டை : சிறப்பம்சங்கள் என்னென்ன?

* குறைந்த நாட்களில் விநியோகம்: உங்கள் EPIC அட்டை 15 நாட்களுக்குள் அனுப்பப்படும்.

* நிலையைக் கண்காணித்தல்: உங்கள் அட்டை எங்கே இருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் (Real-Time) கண்காணிக்கலாம்.

* SMS அறிவிப்புகள்: ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் மொபைலுக்கு SMS மூலம் தகவல் வரும்.

* விநியோகம்: இந்திய அஞ்சல் துறை மூலம் வாக்காளர் அடையாள அட்டை பாதுகாப்பாக வீடுகளுக்கே கிடைக்கும்.

வாக்காளர் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (National Voters’ Services Portal) / ECINet மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை (Step-by-Step):

* தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
* புதிய வாக்காளர் பதிவுக்கான ‘படிவம் 6’ (Form 6) நிரப்பவும்.
* உங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் முகவரி, வயது, அடையாளச் சான்றுகளைப் பதிவேற்றுங்கள்.
* விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
* விண்ணப்பம் முடிந்ததும், குறிப்பு எண் (Reference Number) கொண்ட ஒப்புகைச் சீட்டு (Acknowledgement Slip) வழங்கப்படும்.

தேவையான முக்கிய ஆவணங்கள்:

அடையாளச் சான்று: ஆதார் அட்டை, பாஸ்போர்ட்.

முகவரிச் சான்று: ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டணம்.

வயதுச் சான்று: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ்.

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

விண்ணப்பித்த பிறகு, உங்களுக்குக் கிடைத்த குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்ப நிலையை கண்காணிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

‘விண்ணப்ப நிலையை கண்காணியுங்கள்’ (Track Application Status) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் குறிப்பு எண்ணை (Reference Number) உள்ளிட்டு, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

சமர்ப்பித்தால், உங்கள் வாக்காளர் அட்டையின் தற்போதைய நிலையை உடனே தெரிந்துகொள்ளலாம்.

டிஜிட்டல் வாக்காளர் அட்டை (e-EPIC) பதிவிறக்கம் செய்வது எப்படி?

* உடனடியாகப் பயன்படுத்த டிஜிட்டல் வாக்காளர் அட்டை (e-EPIC) தேவையா? அதையும் சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
* வாக்காளர் சேவை போர்ட்டலில் உள்நுழையவும்.
* e-EPIC பதிவிறக்கப் பகுதிக்குச் செல்லவும்.
* உங்கள் EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை உள்ளிடவும்.
* உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
* e-EPIC-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்து உங்கள் தொலைபேசி அல்லது டிஜிலாக்கரில் சேமித்துக்கொள்ளலாம்.

இந்த புதிய முயற்சியானது, வாக்காளர்களுக்கு வேகமான, வெளிப்படையான, பாதுகாப்பான சேவையை வழங்குவதே நோக்கம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உங்கள் வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.