ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்ட மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்காக இருப்பதால் தனக்கான வழியைத் தேடிப் புறப்பட்டு திமுகவில் கலந்துவிட்டார்.
மனோஜ் பாண்டியனுக்கு தேர்தலில் சீட் உறுதி என்று உத்தரவாதம் அளித்துத்தான் அவரை திமுகவுக்கு அழைத்து வந்தாராம் அமைச்சர் சேகர் பாபு. இந்த நிலையில், ஏற்கெனவே ஆலங்குளத்தில் வெற்றிபெற்ற மனோஜ் பாண்டியனுக்கு இந்த முறை அந்தத் தொகுதிக்குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசிவைத்திருப்பதாக வந்து விழும் செய்திகள், அம்பாசமுத் திரத்தில் மூன்று முறை தோற்றும் அந்தத் தொகுதிக்காக இன்னமும் காத்திருக்கும் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வகையறாக்களை கொஞ்சம் திகைக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லை மேற்கு மாவட்ட திமுகவினர், “அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் தொடர்ச்சியாக 3 முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். மீண்டும் அவரை அங்கு நிறுத்தினால் ஜெயிப்பது சிரமம் என்பதால் தலைமை மனோஜ் பாண்டியனை சாய்ஸாக எடுத்திருக்கலாம்.
அம்பாசமுத்திரத்தில் நாடார் மற்றும் முக்குலத்தோர் சமுதாய மக்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. மனோஜ் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் அனைத்துத் தரப்பினருடனும் நட்பாக இருப்பவர். அதுவுமில்லாமல், அவரது தந்தை பி.ஹெச்.பாண்டியனுக்கு என இந்தப் பகுதியில் தனித்த செல்வாக்கு இருக்கிறது.
ஆலங்குளம், அம்பாசமுத்திரம் இதில் எங்கு போட்டியிட்டாலும் மனோஜ் பாண்டியன் எளிதில் வெற்றிபெறுவார். அதனால் திமுக தலைமை, தோற்றுக் கொண்டே இருக்கும் அம்பாசமுத்திரத்தை அவருக்கு ஒதுக்க முடிவெடுத்திருக்கலாம். அதேசமயம், இத்தனை நாளும் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவில் இருந்த ஆலங்குளம் தொகுதியை அண்மையில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக-வுக்குள் சேர்த்த தலைமை, இந்த மாவட்டத்தின் செயலாளராக ஆவுடையப்பனை நியமனம் செய்தது.
ஆலங்குளம் தொகுதியில் நாடார்களுக்கு அடுத்தபடியாக முக்குலத்தோர் அதிகமாக இருக்கிறார்கள். 2021 தேர்தலில் இங்கே பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் தனியாக போட்டியிட்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பிரித்து 3-ம் இடம் பிடித்தார். இம்முறையும் ஹரி நாடார், ராக்கெட் ராஜா உள்ளிட்ட நாடார் சமூகத்து பிரபலங்கள் போட்டியிடலாம் எனப் பேச்சு இருக்கிறது. அப்படி அவர்கள் களமிறங்கினால், நாடார் சமூகத்து வாக்குகள் சிதறும். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஆவுடையப்பனை ஆலங்குளத்தில் நிறுத்தி ஆழம் பார்க்க திமுக தலைமை திட்டமிடலாம்” என்றார்கள்.