ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார்-படாப்பரா மாவட்டத்தில் உள்ள பர்னவாபரா வனச்சரணாலயப் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வழிதவறி வந்த 4 யானைகள், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தன. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் இணைந்து போராடி அந்த யானைகளை மீட்டனர்.
இதுகுறித்து வனத்துறை முதன்மை தலைமைப் பாதுகாவலர் (வனவாழ்வு) அருண் குமார் பாண்டே கூறும்போது, ‘‘4 யானைகள் தவறி விழுந்த அந்த கிணறுக்கு சுற்றுச்சுவர்கள் இல்லை. அதனால் இரவில் அந்த யானைகள் அதில் விழுந்துவிட்டன. இதையடுத்து மீட்புக் குழுவை அழைத்துச் சென்று பணியில் இறங்கினோம். பின்னர் ஜேசிபி மூலம், கிணற்றுப் பகுதியில் சரிவை அமைத்து யானைகள் மீட்கப்பட்டன. அனைத்து யானைகளும் காயம் ஏதுமின்றி மீட்கப்பட்டன’’ என்றார்.