மதுரை: திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத வழக்கில் டாஸ்மாக் வருமான விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மாவட்ட மேலாளர் ஆகியோர் நவ. 7ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், திண்டுக்கல்லில் நாங்கள் கடை நடத்தி வந்த இடங்களை அரசு 2017ல் கையகப்படுத்தியது. இதற்கு வழங்கிய இழப்பீட்டில் குறைக்கப்பட்ட தொகையை கேட்டு 2019ல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க உத்தரவிடப்பட்டது. இழப்பீடு வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து, இந்த வழக்கு 4 முறை விசாரணைக்கு வந்தும் அரசு தரப்பில் நிறைவேற்றப்படவில்லை. உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கோ செல்லவில்லை. எனவே நிலம் கையகப்படுத்தியது தொடர்பான நிலுவை வழக்குகளுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை தொகையை வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் முத்து உள்ளிட்ட 30 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்து கணேசபாண்டியன் வாதிட்டார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது என்றார்.
பின்னர் நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் அக்.16 முதல் நாளை (நவ. 6) வரையிலான வருமானம் மற்றும் வங்கி விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் நவ. 7ல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.