புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் புறாக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு மும்பை நகர மக்கள் தானியங்கள் அளிப்பதும் வழக்கம். ஆனால், புறாக்களால் மும்பை நகர் அசுத்தமாவதாகவும் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, சுவாச நோய் பரவுவதாகவும் புகார்கள் எழுகின்றன.
இதற்கு தீர்வு காண மகாராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடுகளை அப்புறப்படுத்தியது. தாதர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் இருந்த புறாக்களின் கூடுகளை பிளாஸ்டிக்கால் மும்பை நகராட்சி மூடிவிட்டது.
இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மும்பை நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மும்பையில் புறாக்களுக்கு உணவளித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் சுமார் ஒரு லட்சம் புறாக்கள் இறந்து விட்டதாக ஜெயின் துறவி நிலேஷ் சந்திர விஜய் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இவர் மும்பை ஆசாத் மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார். தாதர் பகுதியில் புறாக்களின் கூடுகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நிலேஷ் சந்திர விஜய் கூறும்போது, ‘‘நகரில் பல நூற்றாண்டுகளாக புறாக்கள் வளர்கின்றன. இது எங்கள் மத மரபின் ஒரு பகுதி. இதை மூடுவது விலங்குகளைக் கொல்வது போன்றது. இந்த இயக்கம், அமைதியாகவும் உயிரைப் பாதுகாக்கவும் உள்ளது. இது பறவைகளுக்கான வீடு மட்டுமல்ல, அமைதி மற்றும் இரக்கத்தின் சின்னம். ஒவ்வொரு நாளும் 50 முதல் 60 காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட புறாக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றார்.
புறாக்களுக்கு ஆதரவாக மும்பையில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து வோர்லி நீர்த்தேக்கம், அந்தேரி சதுப்புநிலப் பகுதி, ஐரோலி-முலுண்ட் சோதனைச் சாவடி மற்றும் போரிவலியில் உள்ள கோரேகான் மைதானம் ஆகிய பகுதிகளில் புறாக்களுக்கு உணவளிக்க மும்பை மாநகராட்சி அனுமதித்துள்ளது.