வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் நாயர், ராணி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும், வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்குகள் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் பிற வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்தவர்களின் நடத்தை தொடர்பானது. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுத்துள்ளனர். சில வழக்குகளில் குற்றச் செயல்களில் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்திற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் புதுமையானவை அல்ல. 2010ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட சில குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகக்கூடாது என வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் எழுவது நீதித்துறை செயல்பாட்டின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மதிப்பை குறைப்பதாகவும், தொழிலில் ஒழுங்கீனமாக இருப்பதையும் குறிக்கிறது.

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கமோ அல்லது வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களோ வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதற்கு உறுதியான ஆதாரம் இல்லாவிட்டாலும், இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுவதும், வழக்குகளில் தொடர்புடையவர்கள் தனக்காக ஆஜராக வழக்கறிஞர்களை நியமிப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் புறக்கணிக்க முடியாது.

வழக்கறிஞர் சங்கங்கள் வழக்கறிஞர்கள் தொழிலின் கவுரவத்தையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அந்த சங்கங்கள் மிரட்டல் கருவிகளாக மாறினால் நீதி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை சிதையும்.
வீட்டை காலி செய்யும் வகையில் வழக்கறிஞர்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டியது தொடர்பாக ராணி என்பவர் அளித்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீஸார் பதிவு செய்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.

சிபிசிஐடி போலீஸார் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவத்தை மட்டும் அல்லாமல் புகாரை மறைத்த உள்ளூர் போலீஸாரின் தொடர்பு, வழக்கறிஞர்கள் அத்துமீறி நுழைந்து சொத்தை சேதப்படுத்தியது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். 8 வாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் மீது பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் யார் பாதுகாக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்படக்கூடாது என்பதை முடிவு செய்ய வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு உரிமையில்லை. வழக்கில் தொடர்புடைய நபர்களுக்காக ஆஜராவது தொழில் சார்ந்த விஷயமல்ல, அது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உத்தரவாதமாகும். இந்த உரிமையை முறையான தீர்மானம் அல்லது முறையற்ற அழுத்தம் மூலம் தடுக்க நினைப்பது சட்டத்தின் ஆட்சியின் மூலத்தையும், நியாயமான விசாரணை மற்றும் சட்ட பிரதிநிதித்துவத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களையும் தாக்குவது போலாகும்.

தொழில் ஒற்றுமை என்ற பெயரில் நியாயமான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் போது நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வழக்கறிஞர் சங்கம் ஒரு தொழிற்சங்கம் அல்ல என்பதை வழக்கறிஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும், அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பு. வழக்கறிஞர் சங்கத்தின் சுதந்திரம் நீதித்துறையில் முக்கியமான ஒன்றாகும். அந்த சுதந்திரம் சட்டத்தை மீறுவதன் மூலம் நிரூபிக்கப்படுவதில்லை, சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

சட்டத் தொழிலின் வலிமை எண்ணிக்கையிலோ அல்லது உணர்வின் ஒற்றுமையிலோ இல்லை, மாறாக தைரியம், மனசாட்சி மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளுக்கான அர்ப்பணிப்பில் உள்ளது. எனவே கன்னியாகுமரி மற்றும் பிற மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிக்கான தங்களின் கடமைகளை தீவிரமாக சிந்தித்து, சட்டத் தொழிலின் மரியாதை மற்றும் நம்பிக்கையை பாதுகாத்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது’. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.