புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகளை திருடி பாஜக ஆட்சியைப் பிடித்ததாக ஆதாரங்களை வெளியிட்டு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்து, தேர்தல் ஆணையம் சதி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநில முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா தேர்தலின்போது, அனைத்து கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்தன. வாக்குத் திருட்டின் மூலம் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டன.
இதற்கான 100 சதவீத ஆதாரங்களை “எச்-பைல்ஸ்” ஆக காங்கிரஸ் தொகுத்துள்ளது. அதில், ஒவ்வொரு வாக்கும் எவ்வாறு திருடப்பட்டுள்ளது என்று சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவைப் போலவே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிர மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் வாக்குத் திருட்டுகள் நடைபெற்றுள்ளன. இதனால் நாட்டின் ஜனநாயக முறை சிதைக்கப்பட்டுள்ளதுடன், ‘ஜென் ஸீ’ இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமும் அழிக்கப்பட்டுள்ளது. இதை இளைய தலைமுறை புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
ஹரியானா தேர்தலில் ஒரு நபர், ஒரே புகைப்பட அடையாள அட்டையைக் கொண்டு 2 வாக்குச் சாவடிகள் மூலம் 223 வாக்குகளை செலுத்தியுள்ளார். ஆனால், அதற்கான சிசிடிவி ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டது.
ஹரியானா வாக்காளர் பட்டியலில் 1.24 லட்சம் வாக்காளர்களின் போட்டோ போலியானது. 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள், 93,174 செல்லாத வாக்குகள், 19.26 லட்சம் “பல்க்” வாக்காளர்கள் (ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்) அடங்குவர். 8 பேரில் ஒருவர் போலி வாக்காளர். ஒரே நபர் 18 முறை வாக்களித்துள்ளார். காங்கிரஸ் வெற்றியை தடுப்பதில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கைகோத்து செயல்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பாஜகவுடன் சேர்ந்துகொண்டு, ஹரியானாவில் காங்கிரஸின் வெற்றியை தடுத்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டு சேர்ந்து, நாட்டின் ஜனநாயக அடித்தளத்தை அழித்து விட்டது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ஜென் ஸீ இளைஞர்களின் வாக்குகளை திருடி பாஜக வெற்றி பெறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டிய நிலையில், அதற்கு மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கிரண் ரிஜிஜு அளித்த பதிலில், “அடிப்படை ஆதாரமற்ற கட்டுக்கதைகள் மூலம் ஜென் ஸீ இளைய தலை
முறையினரை தூண்டிவிடும் நடவடிக்கையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். ஹரியானா வாக்காளர் பட்டியலுக்கு எதிராக இதுவரை யாரும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. தோல்விகளை மறைக்கவே இவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை ராகுல் அவ்வப்போது பரப்பி வருகிறார்” என்றார்.
பிரேசிலியப் பெண்… பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி ஹரியானா தேர்தலில் மோசடி நடைபெற்றதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,“வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்கள் மற்றும் விவரங்களுடன் அந்தப் பெண்ணின் புகைப்படம் உள்ளது.
சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ராஷ்மி, வில்மா என்ற பெயர்களில் 22 முறை அந்தப் பெண் வாக்களித்துள்ளார். ஆனால், அவர் இந்தியர் அல்ல, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாத்யூஸ் பெரோரோ. அந்தப் பெண்ணின் ஒரே புகைப்படம் 22 பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது” என்றார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு: ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்தால், அதை அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர்கள் தைரியமாக சுட்டிக்காட்ட முடியும். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சி முகவர்கள் அதை செய்யவில்லை? ஒருவரின் பெயர் பல இடங்களில் இடம்பெறுவதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்போதும், காங்கிரஸ் முகவர்கள் ஏன் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யவில்லை?
தற்போது போலி வாக்காளர்களை களைவதற்காகத்தான் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. பிறகு ஏன் ராகுல் அதை தடுக்கிறார்? அவரது குற்றச்சாட்டு பொய்யானது மட்டுமல்ல, அடிப்படை ஆதாரமற்றது” என்று தெரிவித்தன.