சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வீரர்கள் வரம்பு மீறி நடந்துகொண்ட சம்பவங்கள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டி சம்பளத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப், அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source

நடந்தது என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகள் பெரும் பதற்றத்துடன் காணப்பட்டன. குறிப்பாக, மைதானத்தில் வீரர்கள் ஒருவரையொருவர் சீண்டிக்கொள்வதும், ஆக்ரோஷமான சைகைகளை வெளிப்படுத்துவதும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஐசிசி நடத்திய விரிவான விசாரணையின் முடிவில், இந்த தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹாரிஸ் ரௌஃபுக்கு தடை
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப், ஐசிசியின் நடத்தை விதிகளை மீறி களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார். குறிப்பாக, இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ராவை நோக்கி அவர் செய்த விமானம் விழுவது போன்ற சைகை, விளையாட்டுக்கு எதிரானது என்று கண்டறியப்பட்டது. இந்த தொடரில் அவர் செய்த பல்வேறு தவறுகளுக்காக, மொத்தமாக 4 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டதால், அது தானாகவே இரண்டு போட்டிகளுக்கான தடையாக மாறியது. இதனால், அவர் அடுத்து நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது.
சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ராவுக்கு அபராதம்
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கிரிக்கெட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, அவருக்கு போட்டி சம்பளத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணக்கில் 2 தகுதி நீக்க புள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் வீரர்களின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவும் களத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதால், அவருக்கும் ஒரு தகுதி நீக்க புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேலதிக விசாரணை தேவைப்படவில்லை.
ஐசிசியின் விதி
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும் என்றாலும், வீரர்கள் களத்தில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஐசிசி இந்த நடவடிக்கைகள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பதற்றமான சூழல் நிலவினாலும், அது களத்தில் வெளிப்பட கூடாது என்றும், விளையாட்டின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஐசிசி கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த தண்டனைகள், எதிர்காலத்தில் வீரர்கள் வரம்பு மீறி நடந்து கொள்வதை தடுக்கும் ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark