பாகல்பூர் (பிஹார்): “அரசை மாற்றி, பிஹாரை மாற்றுங்கள். இந்த மாற்றம், பிஹாரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு பாகல்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நரேந்திர மோடியும் அமித் ஷாவும் பல வருடங்களாக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்பு அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால், இப்போது அனைத்து ஆதாரங்களும் புள்ளிவிவரங்களுடன் எங்களிடம் உள்ளன. அதனால்தான் சொல்கிறேன், ஹரியானாவில் இப்போது இருப்பது திருட்டு அரசாங்கம்.
பிஹாரின் விவசாயிகளோ, தொழிலாளர்களோ, நெசவாளர்களோ வங்கிகள் மூலம் கடன் பெறுவதில்லை. அதனால், அவர்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதில்லை. ஆனால், அதானி மற்றும் அம்பானி ஆகியோர் லட்சக்கணக்கான கோடி ரூபாய்க்கு கடன் பெறுகிறார்கள். அவர்களின் கடன்கள் எளிதாக தள்ளுபடி ஆகின்றன. அதானி, அம்பானி போன்றவர்கள் மோடிக்கு பணம் கொடுப்பதால் அவர் இதைச் செய்கிறார்.
பாஜக அரசாங்கம், எப்போதாவது விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதா? அமித் ஷாவின் மகனுக்கு கிரிக்கெட் மட்டையை எப்படி பிடிப்பது என்பது கூட தெரியவில்லை. ஆனால் அவர்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். அவர்தான் கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்துகிறார். இது எப்படி சாத்தியம்?
நரேந்திர மோடியின் முகம் 24 மணி நேரமும் ஊடகங்களில் தெரியும். ஏனெனில், அதற்கு அவர் பணம் செலுத்துகிறார். எதுவும் இலவசமாக நடப்பதில்லை.
இந்த தேர்தல் பிஹாரின் எதிர்காலத்தைப் பற்றியது. உங்களுக்காக உழைக்கும் உங்கள் சிரமங்களில் உங்களுடன் நிற்கும் ஓர் அரசை தேர்ந்தெடுங்கள். அரசை மாற்றி, பிஹாரை மாற்றுங்கள். மாற்றம் பிஹாரில் வரட்டும். இந்த மாற்றம், பிஹாரின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்த மாற்றம், வேலையின்மை, இடப்பெயர்வு, வறுமை, குண்டர்களின் அராஜகம் ஆகியவற்றில் இருந்து பிஹாரை மீட்டு வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்” என்று ராகுல் காந்தி பேசினார்.