Virat Kohli : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உயிர்நாடியாக, தூணாக இருந்த விராட் கோலி விரைவில் ஐபிஎல்-லிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இந்தக் காரணத்துகாக தான், RCB அணியை வைத்திருக்கும் Diageo நிறுவனம், ஐபிஎல் 2026-க்கு முன்னால் அணியை விற்றுவிட (Sale) அவசரம் காட்டுவதாக கிரிக்கெட் வட்டார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
Add Zee News as a Preferred Source
கோலியே பிராண்ட்
பல ஆண்டுகளாக ஐபிஎல்-லின் மிகப்பெரிய ஸ்டாராக இருப்பவர் நம்ம கோலிதான். RCB டீம் கோப்பை வெல்லாத சமயத்தில்கூட, உலக அளவில் அந்த அணிக்கு ரசிகர்கள் பெருகியதற்கு கோலிதான் ஒரே காரணம். AMP Sports and Entertainment கம்பெனியின் தலைவர் இந்திரனில் தாஸ் ப்ளா சொல்வது என்னவென்றால், “ஐபிஎல்-லில் டாப் 3 பிராண்டுகளில் RCB இன்னும் இருப்பதற்கு, கோலியின் மவுசு மட்டும்தான் காரணம்.” என தெரிவித்துள்ளார்.
RCB கடைசியாக ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற பிறகு, டீமின் மார்க்கெட் மதிப்பு விண்ணைத் தொட்டுவிட்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்றால், இல்லை என்கிறது கிரிக்கெட் வட்டாரம். கோலி ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் ஃபார்மட்டில் இருந்து விலகிட்டார். இப்போது ஒன் டே மேட்ச் மற்றும் ஐபிஎல் மட்டும்தான் ஆடுகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடத்துக்குள் ஐபிஎல்-லிலிருந்தும் அவர் குட்பை சொல்ல வாய்ப்பு ரொம்பவே அதிகம். அவர் ஓய்வு பெற்றால், அணியின் பிராண்ட் மதிப்பு மடமடவெனக் குறையும் என்பதால், இப்போது இருக்கும் உச்சகட்ட விலைக்கு விற்க Diageo முடிவு செய்துள்ளது. இது ஒரு புத்திசாலித்தனமான வணிக நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கோலியின் மவுசு: எவ்வளவு கோடிக்குச் சொந்தக்காரர்?
விராட் கோலியின் தனிப்பட்ட வணிக மற்றும் பிராண்ட் மதிப்பு என்பது RCB-யின் விற்பனை முடிவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோலி வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு நடமாடும் பணம் கொட்டும் எந்திரம். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 1050 கோடிக்கும் மேல் இருக்கும் நிலையில், ஐபிஎல் சம்பளம் மட்டும் ஒரு சீசனுக்கு ரூ. 21 கோடியைத் தொடுகிறது. இதுதவிர, வருடத்துக்கு ரூ. 200 கோடிக்கும் மேல் விளம்பரங்கள் மூலமாகவே அவர் சம்பாதிக்கிறார். இந்தியாவில் கோலியைத் தெரியாத வீடே இல்லை. அவரது பேட்டிங் ஒரு மாஸ், அவர் இல்லாமல், புதிய ஓனர்கள் அதே ஸ்டார் பவரை கொண்டு வருவது என்பது மலை ஏறுவதற்குச் சமம். அதனால், கோலி இருக்கும்போதே ஆர்சிபி அணியை அதிக விலைக்கு விற்க Diageo முடிவு செய்துள்ளது.
கோலியின் முடிவென்ன?
ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற பிறகு, விராட் கோலி ஐபிஎல் ஓய்வுக்கான தனது திட்டங்களை அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. ஐபிஎல் 2026-க்கு முன்னதாக RCB தொடர்பான வணிக ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க அவர் மறுத்துவிட்டார் என்ற செய்திகளும், அவர் விரைவில் ஐபிஎல்-லிலிருந்து விலகலாம் என்பதற்கான சிக்னல்களாகப் பார்க்கப்படுகின்றன. முன்பே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டபோதுகூட, அதை மறுத்துவிட்டு ரஜத் படிதாருக்கு தலைமைப் பொறுப்பு அளிக்கப் பரிந்துரைத்திருக்கிறார். இது, அணியின் எதிர்காலத்தை இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க அவர் விரும்புவதைக் காட்டுகிறது.
கோப்பையை வென்ற திருப்தியுடன், அதிக சர்வதேச கிரிக்கெட் சுமை இல்லாமல், உச்சத்தில் இருக்கும்போதே விடைபெற கோலி விரும்பலாம் என்றும், தோனியைப் போல சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் நீண்ட காலம் ஐபிஎல்-லில் நீடிக்க அவர் விரும்ப மாட்டார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
RCB-யின் விற்பனை: Diageo-வின் திட்டம் என்ன?
RCB-யின் உரிமையாளரான Diageo நிறுவனம், கிரிக்கெட் உரிமையை அதன் முக்கிய மதுபான வர்த்தகத்தில் இருந்து ‘முக்கியமற்ற சொத்தாக’ கருதுகிறது. ஐபிஎல் 2026-க்கு முன்னதாக அதாவது மார்ச் 31, 2026-க்குள் விற்பனை செயல்முறையை முடித்துக்கொள்ள நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. அணியின் மதிப்பு உச்சத்தில் இருக்கும்போது விற்று, அதன் மூலம் கிடைக்கும் நிதியை முக்கிய வணிகத்தில் முதலீடு செய்வதுதான் Diageo-வின் சாமர்த்தியமான வணிக உத்தி.
பெங்களூருவின் ரசிகர்கள், கோலி இல்லாத RCB-யின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனர். கோலி விடைபெறுவது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் என்பதால், இந்த விற்பனை ஏலமானது வணிக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கிறது. விராட் கோலியின் இந்த ஓய்வு முடிவும், அதனால் RCB-க்கு ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான மதிப்பும் தான், இந்த விற்பனை ஏலத்துக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய வர்த்தக ரகசியம்.
About the Author
S.Karthikeyan